திருச்சியில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு எம். ஆர். பி. செவிலியர் மேம்பாட்டு சங்கத்தை சேர்ந்த செவிலியர்கள் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செவல்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நள்ளிரவில் பணியில் இருந்த கர்ப்பிணி செவிலியரை தாக்கி, அரிவாள் முனையில் தாலிச்சங்கிலி மற்றும் செல்போனை பறித்துச் சென்றவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். அனைத்து செவிலியர்களுக்கும் பணியிடத்தில் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் பச்சைநாச்சி தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் சுபின், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பால்பாண்டி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் செவிலியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.