கோவில் விழாவில் ஆபாச நடனம்: டி.எஸ்.பி.யிடம் புகார்

0 427
Stalin trichy visit

திருச்சி, மே 30 திருச்சி மாவட்டம் , மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகேயுள்ளது பழைய கோட்டை மேத்தக்கான்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள அம்மன் கோவில் திருவிழா கடந்த 25 ஆம் தேதி நடந்தது. இதனையொட்டி, அன்று இரவு சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் அனுமதி பெற்று ஆடல், பாடல் நிகழ்ச்சி நடந்தது. ஆனால், மேடையில் ஆடிய கலைக்குழுவினர் உயர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல், மிகவும் மோசமாக அரைகுறை ஆடைகளுடன் ஆபாச நடனம் ஆடினர். இந்நிகழ்ச்சியில், பொதுவெளியில் நடனத்தை பார்க்க வந்த 2000 க்கும் மேற்பட்டோர் முன்பு ஒரு கணவன் – மனைவி தனி அறையில் செய்யும் செயல்களை இவர்கள் ஆபாசமான பாடலுடன் விழா மேடையில் செய்து காண்பித்தனர். இதனையொட்டி, இந்த நிகழ்ச்சியை காண வந்த அக்கம்பக்கம் கிராமங்களை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் என ஏராளமான பொதுமக்கள் இதனை பார்த்து முகம் சுழித்தனர். ஆபாசமாகவும், முகம் சுழிக்கும் வகையில் நடந்த இந்த நடன நிகழ்ச்சியை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவவிட்டனர். இந்த வீடியோவை பார்த்த தமிழ்நாடு திரைப்பட மேடை நடன கலைஞர்கள் நலச்சங்க மாநில தலைவர் ராஜசேகரன் தலைமையிலான நிர்வாகிகள், மணப்பாறை காவல் கண்காணிப்பாளர் ராமநாதனை நேரில் சந்தித்து புகார் செய்தனர். அந்த புகாரில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி ஆபாச நடனம் ஆடியவர்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், மற்றும் கைகட்டி வேடிக்கை பார்த்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவில் திருவிழாவில் நடைபெற்ற ஆபாச நடன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது சமூக ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.