மனநலம் பாதித்தவரை தாக்கி போலீசார்: கிராம மக்கள் மறியல்

0 448
Stalin trichy visit

திருச்சி, மே 30 திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த விடத்திலாம்பட்டியில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி ஆடல் – பாடல் நிகழ்ச்சி நேற்றிரவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை காண ஏராளமானோர் குவிந்திருந்த நிலையில் ஆணையூர் பகுதியை சேர்ந்த யோகேஸ்வரன் (22) என்ற மனநலம் பாதித்த இளைஞர் மேடையருகே இருந்த ஸ்பீக்கர் பாக்ஸை பிடித்தபடி நடனத்தை பார்த்து தலையசைத்தபடி நின்று கொண்டிருந்துள்ளார். மேடை அருகே நிற்க கூடாது என காவல்துறையினர் எச்சரித்தும், யோகேஸ்வரன் அப்பகுதியிலேயே நின்று ஆட்டத்தை ரசித்தபடி நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது கூட்டத்தை கட்டுப்படுத்தியபடி வந்த காவல்துறையினர் லத்தியால் யோகேஸ்வரனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், மூக்கு மற்றும் நெற்றியில் காயமடைந்து ரத்தம் சொட்ட, சொட்ட கீழே விழுந்த யோகேஸ்வரனை நிகழ்ச்சிக்கு வந்திருந்த அவரது உறவினர்கள் மீட்டு, சிகிக்சைக்காக மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உள் நோயாளியாக யோகேஸ்வரன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து சம்பவம் பற்றி தகவல் அறிந்த உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். பின்னர் தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரசு மருத்துவமனை முன்பு யோகேஸ்வரனின் உறவினர்கள் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், மணப்பாறை – புதுக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை டி.எஸ்.பி.ராமநாதன் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியலால் மணப்பாறை புதுக்கோட்டை சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மனநலம் பாதிக்கப்பட்டவர் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதல் சம்பவம் மணப்பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.