அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் நீர், மோர் பந்தல்..!
ஏப்ரல்.02, திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், கீர்த்தனா உள்ளிட்டோர் தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல் அமைத்துள்ளனர்.

ஓலைப் பந்தலின் அடியில் மண் பானையில் தண்ணீர் ஊற்றி வைக்கப்படுவதால் தண்ணீர் பந்தல் என்ற பெயர் வந்ததாக பொதுவான கருத்து உள்ளது. நீருள்ள வாயகன்ற பாத்திரத்தை அல்லது பள்ளத்தை சங்க வழக்கில் நீர்பத்தர் என்ற வழக்கம் இருந்துள்ளது. இந்த பத்தர் என்பதே பந்தல் என்று ஆகி, நீர்பந்தல் என்பது தண்ணீர்பந்தல் என்று மருவி வழங்கி வருகிறது. என்ற கருத்து இலக்கிய ஆதாரங்களுடன் சொல்லப்படுகிறது.
தண்ணீர் பந்தல்கள் பெருவழிகளின் ஓரமாக மர நிழலில் அமைக்கபட்டன. அதற்கு தேவையான தண்ணீரை சேமித்து வைக்க கற்பலகை கொண்டு நிரந்தரமாக தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இ்வ்வாறான பழைய நீர்த் தொட்டிகள் தற்போதும் காணப்படுகின்றன. மேலும் கோயில் மண்டபங்களில் நிரந்தரமாக வழிப்போகர்களின் வசதிக்காக அமைப்பதும் உண்டு. திருவிழா காலங்களில் அங்கு கூடும் மக்களின் தாகம் தணிக்க தண்ணீர்ப் பந்தல்கள், நீர் மோர்ப் பந்தல்கள் போன்றவை தற்காலிகமாக தற்போதும் அமைக்கப்படுகின்றன.
தமிழகத்தில் பழங்காலத்திலிருந்தே தண்ணீர் பந்தல் அமைக்கும் பழக்கம் இருந்துள்ளது. இது ஒரு அறச்செயலாக போற்றப்பட்டுள்ளது. நீர் அறம் நன்று என்று சிறுபஞ்சமூலம் தெரிவிக்கிறது. நிறைந்த பந்தற்ற சும்பவார் நீரும் என காஞ்சிபுரத்தில் இருந்த நண்ணீர் பந்தலைப் பற்றி மணிமேகலை கூறுகிறது. திருவிளையாடல் புராணத்தில் உள்ள 35வது படலமான தண்ணீர்ப் பந்தல் வைத்த படலம் என்னும் கதையில் பாண்டிய வீரர்களுக்கு சிவபெருமானே தண்ணீர்ப்பந்தல் வைத்தது தாகம் தணித்த கதை உள்ளது.பெரிய புராணத்தில் அப்பர் பெயரில் அப்பூதியடிகள் தண்ணீர்ப்பந்தல் அமைத்து அறப்பணி செய்ததாக கூறப்பட்டுள்ளது. தாகம் தீர்ப்பதும் பேரறம் என்று, கல்வெட்டுகள் புலப்படுத்துகின்றன.
பிறரின் தாகம் தீர்க்க நாம் முனையும் போது, நம்முடைய தவிப்புகளும் தானாகவே தணிகின்றன என்கின்றன தத்துவங்கள். அதைப் பின்பற்றுங்களேன் என்றே கல்வெட்டுகளும் வழிகாட்டுகின்றன. அதைப் பின்பற்றி, மண்பானையில் நல்ல நீரோ, மோரோ வைத்தால், வெயிலில் வேதனையோடு செல்வோரின் தாகத்தை தணிக்கும். அவர்கள் விடும் ஒவ்வொரு ஆசுவாச மூச்சும், நம் சந்ததிகளை வாழ்த்தும் என்று தண்ணீர் பந்தல் அமைக்கும் விழாவில் யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசினார்.