திருச்சியில் தமிழக பாஜ தொழில் வல்லுநர்கள் பிரிவு சார்பில்ஒரு நாள் கருத்தரங்கம்
திருச்சி, பிப்.16– இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் நிபுணர்களின் பங்கேற்பு கூட்டுப் பொறுப்பாக இருக்க வேண்டும் என பாஜ தமிழக மேலிட இணை பொறுப்பாளர் பொங்குலேட்டி சுதாகர் ரெட்டி தெரிவித்தார்.
தமிழக பாஜ தொழில் வல்லுநர்கள் பிரிவு சார்பில், திருச்சியில் ஒரு நாள் கருத்தரங்கம் நேற்று நடந்தது. இப்பிரிவின் மாநில ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராமன் தலைமை வகித்தார். மாநில இணை ஒருங்கிணைப்பாளர்கள் ஜெகநாதன், சந்திரவேல்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாஜ தமிழக மேலிட இணை பொறுப்பாளர் பொங்குலேட்டி சுதாகர் ரெட்டி பேசுகையில்,
ஐரோப்பியா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட உலகளாவிய நாடுகளுடன் யதார்த்தமான மற்றும் வளர்ச்சி சார்ந்த வர்த்தக ஒப்பந்தங்களை பிரதமர் மோடி அரசு தொடங்கி வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. இத்தகைய செயல்பாடுகள் இந்தியாவின் உலகளாவிய நிலையை வலுப்படுத்தியும், பொருளாதார வளர்ச்சியையும் அதிகரித்துள்ளன. மேலும் ஏற்றுமதி வாய்ப்புகளை மேம்படுத்தியுள்ளன. இந்திய நிபுணர்கள் மற்றும் தொழில்களுக்கு புதிய வழிகள் திறக்கப்பட்டுள்ளது.
ஆகவே நாட்டைக் கட்டியெழுப்புவதில் தொழில்துறை நிபுணர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். மேலும் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மேற்கொண்டுள்ள மாற்றத்திற்கான முயற்சிகள் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதில் தொழில் வல்லுனர் தலைமை தாங்க வேண்டும். “விக்சித் பாரத்” என்ற பெரிய தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்து “விக்சித் தமிழ்நாடு” கட்டியெழுப்புவதற்கு தீவிரமாக பங்களிக்க வேண்டும். இது உள்ளடக்கிய வளர்ச்சி, புதுமை சார்ந்த வளர்ச்சி மற்றும் உலகளாவிய போட்டித் தன்மைக்கான உறுதிப்பாட்டை பாஜ மீண்டும் உறுதிப்படுத்துகிறது. தமிழகம் மற்றும் இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் நிபுணர்களின் பங்கேற்பு கூட்டுப் பொறுப்பாக இருக்க வேண்டும். மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தமிழகத்தின் வளர்ச்சியில் மத்திய அரசுக்கு பெரிய பங்கு உண்டு. ஆனாலும் தமிழகத்தில் ஒட்டு வங்கி அரசியல் நடந்து வருகிறது என்றார்.
இப்பிரிவின் பொறுப்பாளர் ராகவன் பேசுகையில், மக்களிடையே தேசிய சிந்தனைகளை உருவாக்க வேண்டும், தேசியவாதிகளை ஒன்றிணைக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்று 30 பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவும், தமிழகமும் வேறுவேறு என்பது போன்று மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, நாட்டிற்கு எதிரான செயல்கள் அரங்கேறியது. கார்கில் போரின் போது, அதிக நிவாரணம் கொடுத்த மாநிலம் தமிழ்நாடு. பிரிவினைவாதிகள் இந்தியாவுக்கு எதிராக தனித்தமிழ்நாடு என குரல் கொடுக்கிறார்கள். தேசியமும், தெய்வீகமும் இரு கண்கள் என நினைப்பவர்கள் தமிழர்கள். எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக உயர்ந்து, பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது. 2010ல் 10 வது இடத்தில் இருந்து, இன்றைக்கு 4வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. 1990 காலக்கட்டத்தில், சந்திரசேகர் ஆட்சி காலத்தில் தங்கத்தை அடமானம் வைத்து கடன் கட்டக்கூடிய நிலை இருந்தது. ஆனால், இன்றைக்கு அந்நிய செலாவணியின் கையிருப்பு 60 லட்சம் கோடியாக உள்ளது. 4 அடுக்கு ஜிஎஸ்டி இன்றைக்கு 2 அடுக்காக மாற்றப்பட்டுள்ளது. தேசத்தை ஆதரிக்கவும், ஜனநாயகம் தழைக்கவும் பாஜவை ஒவ்வொரும் ஆதரிக்க வேண்டும் என்றார்.
கருத்தரங்கில், பாஜ மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், பாஜ பிரிவுகளின் இணைப் பொறுப்பாளர் நாச்சியப்பன், நடிகை கஸ்தூரி, ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே, கோலாகல ஸ்ரீநிவாஸ், ஆனந்த ரங்கநாதன், ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி செயலாளர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். இதில், பட்டயக் கணக்காளர்கள், ஐடி வல்லுநர்கள், தொழில்முனைவோர், கல்வியாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் பங்கேற்றனர்.