மகளிர் உரிமைத் தொகையை முடக்க நினைத்தவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு

0 145
Stalin trichy visit

திருச்சி, பிப். 16  ரூ. 5000 பெற்ற தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த மகிழ்ச்சியிலும் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முடக்க நினைத்தவர்கள் பெரிய அதிர்ச்சியிலும் உள்ளார்கள் – துணை முதல்வர் பேச்சு

திருச்சி மாவட்டம் லால்குடியில் ரூ.4.69 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகம் மற்றும் ரூ.31.89 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் ஆகியவற்றை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எஸ்.எஸ்.சிவசங்கர், அன்பில் மகேஷ், மெய்யநாதன், திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன், சட்டமன்ற , நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு வீர வாள் பரிசளித்தார்.

தொடர்ந்து அங்கு உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், புதிய பேருந்து நிலையம், நகராட்சி கட்டிடங்களை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். திருச்சி மாவட்டத்தில் திருச்சி மாநகருக்கு அடுத்தப்படியாக வேகமாக வளர்ந்து வரும் ஊர் என்றால் அது லால்குடி தான். தமிழ் மொழிக்காக கலைஞர் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து போராடிய கல்லக்குடி இந்த லால்குடி தான் உள்ளது. மறைந்த அன்பில் தர்மலிங்கம், கே.என்.நேரு, அன்பில் மகேஷ் ஆகிய மூன்று அமைச்சர்களை தந்த ஊர் இந்த லால்குடி.

பஞ்சப்பூரில் மிகப்பெரிய பேருந்து நிலையம் கட்டிய அமைச்சர் கே.என்.நேரு அவர் ஊரான லால்குடியும் இன்று பேருந்து நிலையத்தை கட்டி திறந்துள்ளார்.  இங்கு அதிநவீன பேருந்து நிலையம் வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. அதை இன்று பூர்த்தி செய்துள்ளோம். புதிய பேருந்து நிலையத்தில் புறநகர் பேருந்துகளும் வந்து செல்லும் வகையில், புதிய நவீன பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின்  அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சி திட்டங்களை திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும் திராவிட மாடல் அரசு மகளிர் விடியல் பயணம் திட்டம் , முதலமைச்சர் காலை உணவு திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களையும் இந்தியாவே திரும்பி பார்க்கும் கலைஞர் மகளிர் உதவி திட்டங்களையும் திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வருகிறது.
கலைஞர் மகளிர் உதவி திட்ட மூலம் ஒரு கோடி 31 லட்சம் மகளிர் பயனடைகின்றனர்.
அந்த மகளிர் உரிமை தொகையை சட்டமன்ற தேர்தலை காரணம் காட்டி நிறுத்த சிலர் சூழ்ச்சி செய்தார்கள் ஆனால் நம் முதலமைச்சர் அதை முறியடித்து 5000 ரூபாய் வழங்கி உள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் மீண்டும் திமுக ஆட்சி அமைத்த உடன் உரிமை தொகை ரூ.2000 உயர்த்தி வழங்கப்படும் என்கிற  வாக்குறுதியை  தந்துள்ளார். தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த மகிழ்ச்சியிலும் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முடக்க நினைத்தவர்கள் பெரிய அதிர்ச்சியிலும் உள்ளார்கள்.

திமுக ஆட்சி அமைந்த பின் லால்குடி தொகுதியில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம் நல்ல பல திட்டங்களை வழங்கிய திமுகவிற்கு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

லால்குடியில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம், 5.32 ஏக்கரில் கட்டப்பட்டுள்ளது. இங்கு 40 பேருந்துகள் நிறுத்தும் வசதி, உணவகங்கள் உள்ளிட்ட 120 கடைகள், சி.சி.டி.வி கேமராக்கள், இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், கழிவறை வசதிகள் என பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கட்டப்பட்டுள்ளது.

முன்னதாக திறப்பு விழாவிற்கு வருகை தந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.