திருச்சியில் முன்னுதாரணமாய் மாறும் ஊராட்சி – பட்டையைக் கிளப்பும் பஞ்சாயத்து தலைவி!
ஊர் பஞ்சாயத்து தலைவர் நினைத்தால் உலக நாடுகள் கூட தங்கள் கிராமத்தை திரும்பிப் பார்க்க முடியும் என்பதை கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றி வருகின்றார் திருச்சி அருகே உள்ள ஒரு பஞ்சாயத்தின் தலைவி. “ஊருக்கு உழைத்திடல் யோகம்” என்பார்கள். ஆம் அதேபோலத்தான் இந்த பஞ்சாயத்து தலைவியின் அடுத்தடுத்த அதிரடியான செயல்பாடுகள் பலரையும் திசை திருப்பியுள்ளது.

திருச்சி மாவட்டம் லால்குடிக்கு அருகில், கொள்ளிடம் நதிக்கரையில் உள்ள அழகிய கிராமம். முக்கியமான அரசியல் தலைவர்களை தமிழகத்துக்குத் தந்த ஊர். தி.மு.க-வை உருவாக்கிய தலைவர்களில் ஒருவரான ‘அன்பில்’ தர்மலிங்கம் பிறந்த ஊர். ஜங்கமராஜபுரம், மங்கம்மாள்புரம், கீழன்பில் ஆகிய 3 கிராமங்களும் இணைந்து “அன்பில்” என்றே அழைக்கப்படுகிறது.
இந்த அன்பில் கிராமத்திற்கு அருகே அமைந்துள்ள மங்கம்மாள் புரம் தான்! சிற்றூராக இருந்தாலும் அன்புக்கு பஞ்சமில்லாமல் அப்பகுதி மக்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டுள்ளார் ஊராட்சி மன்ற தலைவி VDM. S.பவித்ரா அருண் காந்தி.

மங்கம்மாள் புரம் ஊராட்சியை பொறுத்தவரை சுமார் 700 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு ஊராட்சி மன்ற தலைவியாக பவித்ரா அருண் காந்தி பொறுப்பேற்றது முதல் கொண்டு தங்களுடைய ஊராட்சிக்கு பல்வேறு கட்ட நலத்திட்ட உதவிகளையும், பல்வேறு பணிகளையும் தொடர்ந்து செய்து வருகின்றார்.
ஒரு பெண்ணிற்கு தான் பெண்களின் மனது புரியும் என்பார்கள். ஆம், அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்த கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊராட்சி மன்ற தலைவியின் ஏற்பாட்டில் அனைவருக்கும் மதிய உணவை வழங்கியுள்ளார். அங்குள்ள கர்ப்பிணி பெண்கள் அனைவரும் மனதார வாழ்த்தி சென்ற சம்பவம் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக நிகழ்ந்தது.
இந்த இக்கட்டான காலகட்டத்தில், கொரோனா நோய்த்தொற்றை ஒழிப்பதற்காக தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் ஏற்கனவே இந்தத் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்ற வேளையில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
இந்தநிலையில் சுமார் 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட திருச்சி மாவட்டத்தில் இரண்டாவது கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கிராமப்புறப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு என்பது குறைவாக தான் இருக்கும். ஆனால் மங்கம்மாள் புரம் ஊராட்சி மன்ற தலைவி சிந்தனையால் அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் மரக்கன்றுகளை வழங்கி வருகிறார்.
மரக்கன்றுகள் வழங்குவதோடு மட்டுமல்லாமல் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு குலுக்கல் முறையில் பட்டுப்புடவைகள் மற்றும் செல்போன்களையும் தருவதாக தனது மங்கம்மாள்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு சென்று ஒலிபெருக்கி மூலம் தானே அதனை அறிவித்துள்ளார்.

ஒருபுறம் தன்னுடைய ஊராட்சிக்காக முழுமூச்சாய் பணி செய்து வரும் வேளையில், நோய்த்தொற்றை தடுப்பதற்காக பல்வேறு வழிமுறைகளையும் கையாண்டு வரும் ஊராட்சி மன்ற தலைவி பவித்ரா அருண் காந்தி உண்மையிலேயே கிரேட் தான்!
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…. https://chat.whatsapp.com/Lsr0mGx2BtcHISoYvuFdGy