திருச்சி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகள் அமைக்கப்படும்; டீன் வனிதா தகவல்

0 535
Stalin trichy visit

தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் ஒரு சில மாநிலங்களில் தற்போது டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கி இருக்கிறது. தமிழகத்திலும் சில மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 63-வது வார்டில் ஒரு சிறுமிக்கு டெங்கு பாதிப்பு இருந்ததை தொடர்ந்து, அந்த பகுதியில் மாநகராட்சி சுகாதாரத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையிலும் டெங்கு பாதிப்புக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அரசு மருத்துவமனை டீன் வனிதா கூறியதாவது:-

சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்பேரில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தயார்நிலையில் இருக்கிறோம். தலைவலி, உடல்வலி, வயிற்றுவலி, வாந்தி, குமட்டல், காய்ச்சல் போன்றவை டெங்கு அறிகுறிகளாக உள்ளன. டெங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் அரசு மருத்துவமனை வளாகத்தில் பழைய கட்டிடத்தில் தேவைக்கேற்ப தனி வார்டுகள் உருவாக்க தயார் நிலையில் உள்ளோம்.

மேலும், டெங்கு அறிகுறி இருந்தால் தாமதிக்காமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர வேண்டும். அவர்களுக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படும். வீடுகளுக்கு முன்பு தண்ணீர் தேங்காமலும், கொசு உற்பத்திக்கான ஆதாரங்களை அழித்தால் டெங்கு காய்ச்சல் பரவலைதடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 29-வது வார்டு பகுதியில் சமீபத்தில் 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி டெங்கு கொசு உற்பத்தி ஆதாரங்களை அழிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.