உலகத் தண்ணீர் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு
திருச்சி,மார்ச் 20 தண்ணீர் அமைப்பு, கலைக் காவிரி நுண்கலைக்கல்லூரியின் தண்ணீர் சுற்றுச் சூழல் மாணவர் மன்றம் சார்பில் மார்ச் – 22 உலகத் தண்ணீர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வும், மற்றும் உறுதிமொழி ஏற்பு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் முனைவர் ப.நடராஜன் தலைமை வகித்தார்,தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே.சி. நீலமேகம் முன்னிலை வகித்தார்.
உலகத் தண்ணீர் தினத்தை முன்னிட்டு ஐ.நா சபை இந்த ஆண்டு “பனிப்பாறையைப் பாதுகாப்போம்” என்ற தலைப்பில் நிகழ்வின் ஒருங்கிணைப்பாளரும் தண்ணீர் அமைப்பின் செயலாளருமான தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் கி.சதீஷ் குமார் உரையாற்றினார்.
காலநிலை மாற்றத்தால் புவி வெப்பமயமாதல் நிகழ்வினால் துருவப் பகுதிகளில் உள்ள பனிப் பாறைகள் உருகுதல் நிகழ்கிறது. ஆதலால் கடல் மட்டம் உயர்கிறது. கடல் மட்டம் உயர்வதால் இயற்கையில் பல்வேறு மாற்றங்கள் பேரிடர்கள் ஏற்படுகிறது. நீர்நிலைகளை பாதுகாத்தல், நன்னீர் ஏரிகள் குளங்கள் பராமரித்தல் , அதன் வாயிலாக பல்லுயிர்களைக் காத்தல் ஒவ்வொரு மனிதனுக்குமான பொறுப்பாகும். நீர்நிலைகளை ஆக்கிரமித்தல், சிதைத்தல், சுரண்டல் இவற்றைத் தடுத்து நில வளங்களை சூழலைப் பாதுகாத்தல் எதிர்காலத் தலைமுறையினருக்கான வாழ்வாதாரங்களை பாதுகாத்தல் என்பதை உணர்தல் வேண்டும் என்றார். தொடர்ந்து ஆசிரியர்கள் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.