போலிச் சான்றளித்து மின் இணைப்பு பெற்றவர் மீது காவல்துறையில் புகார்
திருச்சி, டிச. 20 திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள சோழமாதேவி கிராம நிர்வாக அலுவலர் கையெழுத்து போட்டு போலியாக சான்றை தயாரித்து மின் இணைப்பு பெற்றவர்கள் மீதும், மின் இணைப்பு வழங்க பரிந்துரைத்த நவல்பட்டு மின்வாரிய இளநிலை பொறியாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சோழமாதேவி கிராம நிர்வாக அலுவலர் நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி திருவெறும்பூரை சேர்ந்தவர் அந்தோணிதுரை (55). இவர் சோழமாதேவி ஊராட்சி கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் சோழமாதேவி ஊராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கார் நகர் பகுதியை சேர்ந்த சிலர் புதிதாக தங்களது வீட்டிற்கு மின் இணைப்பு பெறுவதற்காக அந்தோணிதுரையின் கையெழுத்தை போலியாக
இட்டு கிராம நிர்வாக அலுவலர் சான்று கொடுத்தது போல் போலியாக சான்று தயாரித்து மின் இணைப்பு பெற்றுள்ளனர்.
இச்சம்பவம் அந்தோணிதுரைக்கு தெரிய வந்ததும் இச்சம்பவம் குறித்து அவர் நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில் அந்தோணிதுரை தெரிவித்து உள்ளதாவது,
சோழமாதேவி கிராம நிர்வாக அலுவலராக 2021 பொறுப்பேற்ற கொண்ட நாள் முதல் அம்பேத்கார் நகர் பகுதியைச் சார்த்த பொதுமக்கள் கோரிக்கை படி பட்டா மாற்றம், நில உரிமைச் சான்று போன்றவை வழங்க இயலாது என என்னால் மறுக்கப்பட்டு வந்தது. பொதுமக்கள் தமக்குரிய வீட்டிற்கு மின் இணைப்பு பெற வேண்டுமானால் அவர்களுக்கு உரிய கிரைய ஆவணம், சிட்டா, அடங்கல், பட்டா போன்றவை பயன்படுத்தியும் மற்றும் வீட்டு வரி, நில வரைபடத்தை கொண்டும் மின் இணைப்பு பெற வேண்டும். நவல்பட்டு இளநிலை பொறியாளர் எதன் அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் சான்றை ஒரு ஆவணமாக பயன்படுத்தி புதிய மின் இணைப்பு வழங்க முன் வந்தார் என்பது ஒரு புதிராக உள்ளது. பட்டா இல்லை, சிட்டா வரைப்படம் பதிவு பெற்ற எந்த ஒரு ஆவணமும் இல்லாத நிலையில் மின்னிணைப்பு பெற கிராம நிர்வாக அலுவலர் எழுதியதாக ஒரு சான்றை ஆவணமாக பயன்படுத்தி மின் இணைப்பு வழங்கலாம் என்பது தவறான செயல்களுக்கு வழி வகுக்க முன்னுதாரணம் ஆகி விடும். மேற்கண்ட நபர்கள் மின் இணைப்பு பெற கிராம நிர்வாக அலுவலர் சான்று பெற அறிவுறுத்தியது யார் அதன் பெயரில் பொதுமக்களில் சிலர் தவறான ஒரு போலியான கிராம நிர்வாக அலுவலர் சான்று தயாரித்தது எப்படி என்றும், அதை தயாரித்து அளித்த நபர் யார் எனவும் மேலும் கிராம நிர்வாக அலுவலர் சான்று பெற்று வர கூறிய நவல்பட்டு மின்சாரம் வாரியம் இளநிலை பொறியாளர் மீதும் போலியான சான்று வழங்கிய நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து தக்க நடவடிக்கைஎடுக்க வேண்டும் என கூறி அந்தோணிதுரை தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் நவல்பட்டு போலீசார் மனுவைப் பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.