அதிமுக ஆட்சிக்கு வந்ததும் குயவர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் : முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
திருச்சி, பிப். 23 திருச்சியில் நடைபெற்ற குயவர்கள் மாநாட்டில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
குயவர்கள் கோரிக்கைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வர் ஆன பின்பு முன்னெடுக்கப்பட்டு அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.
குயவர்கள் மண் எடுக்க செல்லும்போது காவல்துறையினர் தடுத்து நிறுத்துவதும் அவர்களிடம் பணம் பெறுவதும் நடைபெறுகிறது. சிறுபான்மையினர் வளரக்கூடாது என திமுகவினர் நினைக்கின்றனர்.
அதிமுக ஆட்சியில் ஒரு சில தவறுகள் நடந்தாலும் உடனடியாக அதற்கான தீர்வு காணப்படும். ஆனால் திமுக ஆட்சியில் குற்றங்கள் மறைக்கப்படுகிறது. வன்முறை கலாச்சாரமாக மாறி உள்ளது சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது. இவற்றை தடுப்பதற்கு ஆட்சி மாற்றம் கட்டாயம் வேண்டும்.
தமிழ்நாடு என்பது அமைதி பூங்கா.. அற்புதமான நாடு அனைத்து சமுதாயத்தினரும் மதத்தினரும் ஒற்றுமையாக வாழ்கின்ற புண்ணிய பூமி தமிழ்நாடு. இங்கு குழப்பத்தை ஏற்படுத்த வருகின்ற தீவிரவாதிகளாக இருந்தாலும் சமூக விரோதிகளாக இருந்தாலும் அவற்றை தடுக்கின்ற பணியை காவல்துறையை கையில் வைத்திருக்கின்ற தமிழக முதல்வர் செய்ய வேண்டும். அதனை திமுக ஆட்சி செய்ய தவறி உள்ளது. சட்ட ஒழுங்கை காப்பாற்ற திமுக ஆட்சி மக்களின் வெறுப்பை பெறுகின்ற ஆட்சியாக உள்ளது.
அமைச்சர் நேரு மற்றும் அரசு அதிகாரிகள் ஐஏஎஸ் அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்து அமலாக்குத்துறை ஆதாரங்கள் கொடுத்தும் திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஏன் என்றால் திமுக கட்சியினர் தப்பு செய்ததால் காப்பாற்ற பார்க்கின்றனர். தவறு செய்பவர்களை ஊக்கப்படுத்தும் நிலையில் திமுக அரசு உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் எந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படவில்லை அதன் பின்னர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிகளும் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை அவ்வாறு நடந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது யாரும் தப்பவில்லை. தேசியத்தையும் தெய்வீகத்தையும் நிலைநாட்டக்கூடிய ஒரு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக வரவேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். வரக்கூடிய தேர்தல் தேசியத்தையும் தெய்வீகத்தையும் போற்றக்கூடிய தேர்தலாக இருக்கும் திமுகவுக்கு பாதகமாகவும் அதிமுகவுக்கு சாதகமாகவும் வரக்கூடிய தேர்தல் அமையும் என்றார்.