தார் கலவை நிறுவனத்தை கண்டித்து லாரியை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்
திருச்சி, ஆக.7 மணப்பாறை அருகே தனியார் தார் கலவை நிறுவனத்தால் சேதமடைந்த சாலையை செப்பனிடக்கோரி பொதுமக்கள் லாரியை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பெருமாம்பட்டியில் கேரளாவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் தார் கலவை ஆலை கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு ஜல்லி கற்களுடன் தாரை மிக்சிங் செய்து சாலை அமைக்கும் பணிக்கு டிப்பர் லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகிறது. கனரக லாரிகள் செல்வதால் பாலக்கருதம்பட்டியில் இருந்து பெருமாம்பட்டி செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலையாக மாறிவிட்டது.
இது குறித்து தனியார் நிறுவனத்திடம் அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தபோது புதிதாக சாலை அமைத்து தருவதாக உறுதியளித்துள்ளனர். ஆனால் நீண்ட காலமாகியும் சாலையை புதுப்பிக்க வில்லை. தற்போது சாலை அமைக்கும் பணிக்கான ஒப்பந்த காலம் முடிவடைந்து தனியார் நிறுவனத்தினர் இங்கிருந்து வேறு பகுதிக்கு செல்வதாக கூறப்படுகிறது. இதனால் இங்கிருக்கும் இயந்திரங்களை இடமாற்றம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனியார் நிறுவனத்தால் குண்டும் குழியுமாக மோசமான நிலையில் உள்ள சாலையை புதிதாக அமைத்து தரவேண்டும் எனக்கோரி பெருமாம்பட்டியைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று நிறுவனத்தை முற்றுகையிட்டு லோடு ஏற்றிச் சென்ற டிப்பர் லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து மணப்பாறை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தனியார் நிறுவனத்தினர் மூன்று நாட்களில் புதிய சாலை அமைத்து தருவதாக உறுதியளித்ததால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு லாரியை விடுவித்தனர். சாலை அமைக்கக் கோரி பொதுமக்கள் தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்டு லாரியை சிறைப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.