வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்ட 2 பேரை விடுவிக்க வலியுறுத்தி சாலை மறியல்
திருச்சி, ஆக.2 மணப்பாறை அருகே வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரை விடுவிக்க கோரி 3 மணி நேரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல்
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே கல்பட்டி பகுதியில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட ஒரு பிரச்சனையில் இருதரப்பினர் மீதும் வையம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் ஒரு தரப்பைச் சேர்ந்தவர்கள் அளித்த புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மற்றொரு தரப்பைச் சேர்ந்த இருவரை நேற்று வையம்பட்டி போலீசார் கைது செய்தனர். இதனால் கைது செய்யப்பட்ட தரப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்ட இருவரையும் உடனடியாக விடுவிக்கக்கோரி திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கல்பட்டியில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மாலையில் தொடங்கிய மறியல் போராட்டத்தால் சுமார் 5 கிலோ மீட்டர் வரை போக்குவரத்து ஸ்தம்பித்து நின்றது.
சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை டிஎஸ்பி காவியா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் கைது செய்யப்பட்ட இருவரை விடுவித்தால் மட்டுமே மறியலை கைவிடுவோம் என்று கூறி மக்கள் மறியல் போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதையடுத்து திருச்சி மாவட்ட எஸ்பி., செல்வநாகரெத்தினம் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருதரப்பினர் அளித்திருக்கும் புகாரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு தரப்பினர் அளித்த புகாரில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே போல் கைது செய்யப்பட்டவர்களின் தரப்பில் இருந்த கொடுக்கப்பட்ட புகாரின் பேரிலும் உரிய முகாந்திரத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். கோரிக்கை குறித்து விசாரணை செய்து முடிவு எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து மாலையில் தொடங்கிய சாலை மறியல் போராட்டத்தில் சுமார் 3 மணி நேரத்திற்கு பின் இரவில் முடித்துக் கொண்டனர்.
இதனால் திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டு மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.