கஞ்சா விற்பனை செய்தவர்களை காட்டிக்கொடுத்த கூலித்தொழிலாளியின் கையை வெட்டிய ரவுடிகள்..
திருச்சியில் கஞ்சா விற்பனை செய்தவர்களை காவல் துறையினருக்கு காட்டிக்கொடுத்த கூலித்தொழிலாளியின் கையை திட்டமிட்டு கொடூரமாக வெட்டி சென்ற ரவுடிகள் – தப்பி ஓடிய ரவுடிகளை பிடித்து மிகக் கடுமையான தண்டனையை வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை.
திருச்சி சங்கிலியாண்டபுரம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் ராமு (48) கூலித் தொழிலாளியான இவர் பாலக்கரை காவல்துறையினருக்கு இன்பார்மராக இருந்து வந்தார். குறிப்பாக அப்பகுதியில் கஞ்சா வியாபாரிகள், ரவுடிகள் நடமாட்டம் குறித்து அவ்வப் போது ராமு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார் – கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த அதே பகுதியில் வசிக்கும் ரவுடிகள் விஜய் (25)ஹரி (25) ஆகியோருக்கும் ராமுக்கும் இதன் காரணமாக நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
ஹரி விஜய் ஆகிய இருவர் மீதும் பாலக்கரை, அரியமங்கலம், தில்லைநகர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கஞ்சா விற்பனை,ஆட்கடத்தல், அடிதடி,கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்த ரவுடிகள் ஹரி மற்றும் விஜய் இன்று மீண்டும் பாலக்கரை பகுதிக்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதில் திடீரென இருவரும் அரிவாளால் ராமுவின் வலது கையை வெட்டினர் – இதில் அவரது கை துண்டானது. அவரது இடது கையையும் வெட்டினர் .
ரத்தவெள்ளத்தில் அலறியபடி ராமு மயங்கி விழுந்தார்,அப்போது இருவரும்
துண்டான கையை எடுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் அங்கு இருந்து தப்பி சென்றனர்.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இதுகுறித்து பாலக்கரை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர் – சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உயிருக்கு போராடிய ராமுவை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய ரவுடிகள் ஹரி, விஜய் இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர் . பட்டப்பகலில் நடைபெற்ற இச்சம்பவம் சங்கிலியாண்டபுரம் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கஞ்சா விற்பனையில் ஈடுபடும் இளைஞர்கள் தான் பெரும்பாலான மிகப்பெரிய குற்ற சம்பவங்களுக்கு காரணமாக இருக்கிறார்கள் என்பது மிகவும் வேதனை அளிக்கும் விஷயமாக உள்ளது எனக் கூறும் அப்பகுதி மக்கள் இதுபோன்ற ரவுடிகளை பிடித்து முதல் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தனர்.