போலி கிரிப்டோ கரன்சி செயலி மூலம் ரூ.3 லட்சம் மோசடி
திருச்சி, ஆக.6 திருச்சி கண்டோன்மெண்ட் எஸ்.பி.ஐ. காலனி பகுதியை சேர்ந்த வர் ராமச்சந்திரன் (44). இவருடைய டெலிகிராம் செயலிக்கு கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ம் தேதி முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று கூறி ஒரு லிங்க் வந்துள்ளது. அந்த லிங்கை அவர் கிளிக் செய்தும், கிரிப்டோ கரன்சி செயலி போன்று ஒரு செயலி ஓப்பன் ஆகியுள்ளது. அதில் ஒரு கணக்கை தொடங்கிய அவர், தனது விவரங்களை பதிவு செய்து, முதலில், ரூ.7 ஆயிரத்து 211-யை முதலீடு செய்யவே, அதற்கு ரூ.1,808 லாபம் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து டெலிகிராம் மூலம் பேசிய மர்மநபர் தொடர்ந்து முதலீடு செய்தால் அதிகலாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியுள் ளார். அதை நம்பிய ராமச்சந்திரன், அந்த செயலியில் தொடர்ந்து ரூ.3 லட்சத்து 4 ஆயிரத்து 124 வரை முதலீடு செய்துள்ளார். ஆனால் அதன்பிறகு அவருக்கு எந்தவித லாபமும் வரவில்லை. செலுத்திய பணமும் கிடைக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராமச்சந்திரன் இதுபற்றி திருச்சி சைபர்கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.