சமயபுரம் ஆதிமாரியம்மன் கோயில் தேரோட்டம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு
திருச்சி, மார்ச் 2 திருச்சி சமயபுரம் ஆதிமாரியம்மன் கோயிலின் மாசி மாத தேரோட்டம் வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது – இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த இனாம்சமயபுரம் ஆதி மாரியம்மன் கோயில் தேரோட்டம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சக்தி கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இனாம் சமயபுரத்தில் உள்ள ஆதிமாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் நடைபெறும் அந்த வகையில் இந்த ஆண்டிற்கான தேர்திருவிழா கடந்த பிப்ரவரி மாதம் 8 ம் தேதி தொடங்கி அன்று, ஆதிமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரத்தில் சிம்மம், யானை, ரிஷபம், அன்ன , குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. முன்னதாக காலை 9 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தேரில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து காலை 9.20 மணிக்கு மேளதாளங்கள் முழங்க, அதிர்வேட்டுகளுடன் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோடும் வீதி வழியாக வலம் வந்த தேர் மீண்டும் நிலையை அடைந்தது. தேரோட்டத்தைெயாட்டி ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், அக்னிசட்டி எடுத்தும் கோயிலை அடைந்து பயபக்தியுடன் அம்மனை வழிபட்டனர்.
பெரம்பலூர் முன்னாள் அதிமுக பாராளுமன்ற வேட்பாளரும் , தொழிலதிபருமான சந்திரமோகன் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தார்.
தேரோட்டத்தையொட்டி பல்வேறு அமைப்புகளின் சார்பாக ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட வசதிகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தனர்.
இந்த கட்டுக்கடங்கா கூட்டத்தில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு சமயபுரம் போலீசார் மற்றும் கோயில் பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் இளங்கோவன் ,கோவில் இணை ஆணையர் சூரியநாராயணன் தலைமையில் கோயில் ஊழியர்கள், கோயில் குருக்கள் ஜம்புநாதன் , குருக்கள் ஹரி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.