செப்டம்பர் 05 கருப்பு தினம் : ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றோர் நல சங்கம் அறிவிப்பு
செப்டம்பர் 05 ஆசிரியர் தினத்தை கருப்பு தினமாக அறிவித்த 2013 ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றோர் நல சங்கம். தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி வழங்க தமிழக அரசு மீது அதிருப்தி
இதுகுறித்து ஆசிரியர் சங்க நிருவாகிகள் கூறுகையில், 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் பன்னிரண்டு ஆண்டுகளாக பணியின்றி அடிப்படை வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகிறோம் இதுவரை 90க்கும் மேற்பட்ட போராட்டங்களை முன்னெடுத்து எங்களுக்கு எந்த ஒரு தீர்வும் எட்டப்படவில்லை.
ஆசிரியர்களுக்கான அரசு என்று சொல்லப்படுகிற திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி 177 ம் நிறைவேற்றப்படவில்லை ஏற்கனவே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மீண்டும் ஒரு நியமனத் தேர்வு அரசாணை (149 ) என்பது இருள் சூழ்ந்தது அர்த்தமற்றது இந்த அரசாணை ஊழலுக்கு வழிவகுக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது கர்ஜித்த மு க ஸ்டாலின் அவருடைய நான்காண்டு ஆட்சி காலத்தில் சொன்னதுக்கு முரணாக முற்றிலும் எதிராக நியமனத் தேர்வு என்ற ஒன்றை நடத்தி தொடர்ந்து ஆசிரியர் நியமனங்கள் ஊழலின் அடிப்படையில் தான் நியமிக்கப்படும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார்.
மேலும் 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற எங்களை ரூபாய் 10,000 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணி அமர்த்தினாலும் 5,000 ஆசிரியர்கள் தயாராக உள்ளோம் என்று சம்மதம் தெரிவித்த போதும் திராவிட முன்னேற்ற கழக அரசு வேருக்கு வெந்நீரை ஊற்றி விட்டு விருதுக்கு விழா கொண்டாடி தொடர்ந்து எங்களை வஞ்சித்து வருகிறது.
மேலும் உச்ச நீதிமன்றத்தில் எங்களுக்கு ஆறுதலாக கொடுக்கப்பட்ட தீர்ப்பையும் மதிக்காமல் ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பையும் வைத்து தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற எங்களை தற்காலிக ஆசிரியர் பணிக்கு கூட அனுமதிக்காத இந்த அரசு தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியில் உள்ளவர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது.
லட்சியத்தோடு ஆசிரியர் பணியை எதிர்நோக்கி காத்திருக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு பணி வழங்காமல் உரிய தகுதி பெறாதவர்களை வாக்கிற்காக பாதுகாத்து வருவது போல் இரட்டை வேடம் போடுகிறது திமுக அரசு இதையெல்லாம் பார்க்கும் பொழுது ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணியின்றி அல்லல்படும் எங்களுக்கு
இதெல்லாம் ஒரு நாடா,,
இங்கு ஆசிரியர் தினம் ஒரு கேடா,,
என்றுதான் தோன்றுகிறது தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக நாங்கள் ஆசிரியர் தினத்தை செப்டம்பர் 5 அன்று கருப்பு தினமாகத்தான் அனுசரிக்கிறோம் என்று கூறினார்கள்.