சூரிய சக்தி மூலம் நீரை சூடாக்கும் முறை
திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் ரெயில் என்ஜின்கள் தயாரித்தல் மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு என்ஜின்களுக்கான உதிரிபாகங்களை வெப்ப நீரால் சுத்தப்படுத்துவதற்காக இதுவரை மின்ஹீட்டர்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. அதற்கு பதிலாக பாராபோலிக் சோலார் கான்சென்ட்ரேட்டர் என்ற நீரை சூடாக்கும் புதிய யூனிட் நிறுவப்பட்டுள்ளது.
தென்னக ரெயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் கடந்த 9-ந் தேதி பொன்மலை ரெயில்வே பணிமனை அதிகாரிகள், கண்காணிப்பாளர்கள் முன்னிலையில் காணொளி காட்சி மூலம் பாராபோலிக் சோலார் கான்சென்ட்ரேட்டரை திறந்து வைத்தார். இந்த யூனிட்டானது ஒரு நாளைக்கு 10 ஆயிரம் லிட்டர் சுடுநீரை சூரிய சக்தியை மட்டுமே பயன்படுத்தி வழங்கும் திறன் கொண்டவையாகும்.
வழக்கமான மின்சார ஹீட்டருக்கு பதிலாக சோலார் கான்சன்ட்ரேட்டரை நிறுவுவதன் மூலம் பொன்மலை பணிமனையானது வருடத்துக்கு சுமார் 1 லட்சத்து 90 ஆயிரத்து 895 யூனிட் மின்சாரம் மற்றும் ரூ.15 லட்சத்து 27 ஆயிரத்து 160 சேமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.