மணப்பாறை அருகே பெற்ற குழந்தையை முட்புதரில் வீசிய கல்நெஞ்ச தாய்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மாமுண்டி ஆற்றங்கரையில் உள்ள முட்புதர் மறைவில் இருந்து இன்று காலை குழந்தையின் அழுகுரல் சத்தம் வருவதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் அங்கு சென்று பார்க்கும் போது பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை ஒன்று அழுது கொண்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்கள் சம்பவ இடத்துக்கு சென்று குழந்தையை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
சற்று நேரத்தில் பெண் ஒருவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் சந்தேகமடைந்து மருத்துவர்கள் அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர்தான் குழந்தையை பெற்றெடுத்த தாய் என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் விசாரித்த போது,
மணப்பாறை அருகே உள்ள இனாம்ரெட்டியபட்டியைச் சேர்ந்த தர்மராஜ் மனைவி சசிகலா (வயது 38) என்பதும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தர்மராஜ் இறந்துவிட்டநிலையில் தவறான உறவால் சசிகலா கர்ப்பமானதால் உறவினர்கள் யாரும் சசிகலாவுடன் தொடர்பில் இல்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய சசிகலாவுக்கு நேற்றிரவு மாமுண்டி ஆறு பகுதியில் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தையை ஆற்றங்கரையில் முட்புதரில் போட்டுவிட்டுச் சென்றதும், பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு வந்ததாகவும் தெரிவித்தார். இதனையடுத்து மருத்துவர்கள் மணப்பாறை போலீசுக்கு தகவல் அளித்ததையடுத்து போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தவறான உறவால் பிறந்த குழந்தையை பெற்ற தாயே முட்புதரில் வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.