மணப்பாறை அருகே கோவில் படுகளம் திருவிழாவில் பூதங்களுக்கு திருமணம் செய்து விநோதம்
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மணப்பட்டியில் தானா முளைத்த மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த வாரம் திருவிழா துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 9 கிராம மக்கள் கொண்டாடும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளின் நிறைவாக படுகளம் திருவிழா இன்று மாலை நடைபெற்றது. அப்போது சின்னமணப்பட்டியில் இருந்து மூங்கில் குச்சிகளால் கட்டப்பட்டு ஆண், பெண் பூதங்களின் மெகா சைஸ் உருவம் வடிவமைக்கபட்டிருந்த நிலையில் இரு பூதங்களுக்கும் திருமணம் செய்து வைத்த பின்னர் அங்கிருந்து காட்டுப்பகுதி வழியாக தரை தப்பட்டை முழங்க ஆட்டம் பாட்டத்துடன் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மணப்பட்டிக்கு பூதங்களை தூக்கிச் சென்றனர். தொடர்ந்து நடைபெற்ற படுகளம் நிகழ்ச்சியில், ராணுவ வீரர்கள் போன்ற வேடம், ஆதிவாசிகள் வேடம், கரடி உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் வந்த இளைஞர்கள் ஆடிப்பாடி தங்களின் மகிழ்ச்சி வெளிப்படுத்தி வந்தனர். நிறைவாக மணப்பட்டியில் தானாமுளைத்த மாரியம்மன் கோவில் முன்பு பூதங்கள் மற்றும் வேடமணிந்தவர்கள் முன்னும், பின்னுமாக ஓடி விளையாடி படுகளத்தை நிறைவு செய்தனர். இதைத் தொடர்ந்து தானா முளைத்த மாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. விழாவில் சுற்றுப்புற பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர்; கலந்து கொண்டனர்.