அரசுப் பள்ளியிலிருந்து ஐஐடிக்குத் தேர்வான மாணவர்
திருச்சி ஜூன் 19 திருவெறும்பூர் அருகே உள்ள என்ஐடி கல்லூரியில் நடத்தப்படும் இக்னைட் வழிகாட்டுதலில் அரசுப் பள்ளியி மாணவர் சென்னை ஐஐடிக்குத் தேர்வாகியுள்ளார்.
திருச்சி துறையூர் புளியஞ்சோலை மெட்டவேலம்பட்டியை சேர்ந்த விவசாயி ராஜ்கோபாலின் மகன் முகில்ராஜ் (18). இவர் அரசு பள்ளியில் படித்து பிளஸ் 2 பொதுத்தேர்வில் கணித பிரிவில் 600 க்கு 545 மதிப்பெண்கள் பெற்றதோடு திருச்சி என்ஐடி கல்லூரியில் இயங்கி வரும் இக்னைட் (ஐஜிஎன்ஐடிடிஇ) கிளப்பில் சேர்ந்து பயின்றார்.
இதைத் தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டு ஜெஇஇ மெயின்ஸ் தேர்வில் 91.23 சதவீத மதிப்பெண்கள் எடுத்து, அசாம் மாநிலத்தில் உள்ள என்ஐடி சில்சாரில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கருவியியல் பொறியியல் படிப்பை தேர்வு செய்து படித்தார். ஆனால் மொழி உள்ளிட்ட பிரச்னைகளால் படிப்பை பாதியிலே கைவிட்டு மீண்டும் என்ஐடி இக்னைட் கிளப்பில் சேர்ந்து மிகத் தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டார். இக்னைட் கிளப்பின் தொடர்ச்சியான இணையம் மற்றும் நேரடி பயிற்சி உள்ளிட்ட வழிகாட்டுதலால், ஜெ.இ.இ மெயின்ஸ் தேர்வை விடாமுயற்சியுடன் மீண்டும் எழுதி 95.88 சதவீத மதிப்பெண்கள் பெற்று, தேசிய அளவில் 1,751 ஆவது ரேங்கை பிடித்ததை தொடர்ந்து முகில்ராஜுக்கு ஐஐடி மெட்ராஸில் கடற்படை கட்டடக்கலை மற்றும் கடல் பொறியியல் துறையில் இடம் கிடைத்துள்ளது.