தமிழ்நாடு அமைதி பூங்காவாக உள்ளது : டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேட்டி
திருச்சி, மார்ச் 3 தமிழ்நாடு மாநில காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான, 62வது தடகளம், சைக்கிளிங் மற்றும் கோ-கோ விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஏடிஜிபி ஜெயராம், ஐ.ஜி ராதிகா, மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன், டிஐஜி சரவண சுந்தர், திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சத்தியப் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில், டிஜிபி சைலேந்திர பாபு பேசியபோது, தமிழ்நாடு காவல் துறை சிறப்பாக செயல்படுகிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் ஜாதிச் சண்டை கிடையாது. மதக் கலவரங்கள் இல்லை. கள்ளச்சாராயம், துப்பாக்கிச் சூடு கலவரங்கள் இல்லை. இத்தனை பெருமைக்கும் முக்கியமானவர்கள். தமிழ்நாட்டில் பணியாற்றும், 1.34 லட்சம் காவலர்கள்தான். தமிழக காவல்துறைக்கு பல்வேறு கட்டங்களில் உதவி ஆய்வாளர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. 444 உதவி ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக மார்ச் 1 ஆம் தேதி பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது.கூடிய விரைவில் அடுத்த குழு, உதவி ஆய்வாளர்கள் சுமார், 500 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்திய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு காவலர்களின் பங்கு அளப்பரியது. இதற்கு ஒரு பெரிய சரித்திரம் இருக்கிறது. கடந்த, 1956 ஆம் ஆண்டு, 1960 ஆம் ஆண்டு ரோம் ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டிகளில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது. அந்த அணியில் இடம் பெற்றிருந்த இரண்டு வீரர்கள், தமிழ்நாடு காவல்துறையை சேர்ந்த காவலர்கள் என்பது சிறப்புக்குரியது. கடந்த, 1980 ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், திருச்சியை சேர்ந்த சுப்பிரமணியம் என்ற காவலர், இந்திய அணியின் சார்பாக, 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கு கொண்டார். நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நாகநாதன் என்னும் காவலர், இந்திய அணி சார்பில், 100 மீட்டர் ஓட்டப்பந்தய ‘ரிலே ரேஸில்’ கலந்து கொண்டார் என்பது பெருமைக்குரிய செய்தி.
கடந்த, 2020 ஆம் ஆண்டு நடந்த மாநிலங்களுக்கு இடையான காவல்துறை போட்டியில், தமிழ்நாடு காவல் துறை, 5 தங்கப்பதக்கம், 4 வெள்ளிப் பதக்கம், 5 வெண்கலப் பதக்கம் என, 14 பதக்கங்களை பெற்று, இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தை பெற்றது. விளையாட்டு நம் அனைவருக்கும் அவசியமாக இருக்கிறது. காவலர்களுக்கு உடல் நலம் மிக மிக முக்கியம். விளையாட்டு வீரர்கள் மற்ற காவலர்களுக்கு இன்றைக்கு ஒரு ரோல் மாடலாக உள்ளீர்கள்.உடல் நலத்துக்கும், மனநலத்துக்கும், சுறுசுறுப்புக்கும் நேர்மைக்கும் நீங்கள் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறீர்கள் என்பதை மனதில் கொண்டு, நீங்கள் சிறப்பாக விளையாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு, செய்தியாளர்களிடம் கூறியபோது, தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக உள்ளது என்பதற்கு சில வரையறைகள் உள்ளன. அதில், ஜாதிக் கலவரங்கள், மதக் கலவரங்கள் போன்ற மோதல்கள் எதுவும் இல்லாமல், துப்பாக்கிச் சூடுகள், சாராயச் சாவுகள் இல்லாமல் மிக அமைதியாக தமிழ்நாடு தற்போது உள்ளது. அதேபோல, மாநில அளவில் உள்ள எல்லா ரவுடிகளின் பட்டியல்களும் தயாரிக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த பல ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், நிதி நிறுவனங்கள் மூலம் பல லட்சம் மக்களை ஏமாற்றி வெளிநாடுகளுக்கு தப்பி சென்றவர்களை ‘இன்டர்போல்’ போலீஸ் மூலம் தொடர்பு கொண்டு அவர்களை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாநகர விரிவாக்கம் என்பது திருச்சி மட்டுமல்ல, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் இது போன்ற விரிவாக்கம் என்பது தேவையாக உள்ளது. புதிய தொழிற்சாலைகள், புதிய குடியிருப்புகள் என்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே தேவையின் அடிப்படையில் புதிய காவல் நிலையங்கள் உருவாக்கப்படும். தமிழ்நாடு முதல்வர், காவலர்களுக்கு, 7 நாள் முழுவதும் வேலை என்று இருந்ததை சட்டத் திருத்தம் செய்து, மற்ற அரசு ஊழியர்களைப் போல வாரத்தில் 5 நாட்கள் மட்டும் தான் வேலை. ஆறாவது நாள் வேலை செய்தால் அதற்கு ஈட்டுத்தொகை (ஈசிஆர்) வழங்கப்படுகிறது. 7ஆவது நாள் கட்டாய ஓய்வு வழங்கப்படுகிறது. ஒரு சில காலக்கட்டங்களில், குறிப்பாக, ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு, திருவண்ணாமலை தீபம் போன்ற முக்கியமான திருவிழா காலங்களில் விடுமுறை வழங்க முடியாது என்ற நிலை உள்ளது. இருப்பினும், வாரத்தில் ஒரு நாள் காவலர்களுக்கென விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார். அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கின் விசாரணை நல்ல முறையில் சென்று கொண்டிருக்கிறது. அதேபோல, வேங்கைவயல் சம்பவம் தொடர்பான சிபிசிஐடி விசாரணையும் சரியான முறையில் சென்று கொண்டிருக்கிறது. என்று தெரிவித்தார்.