இளம்பெண் தற்கொலை : உறவினர்கள் போராட்டம்

0 221
Stalin trichy visit

திருச்சி ஆக. 3  மணப்பாறை அருகே இளம்பெண் தற்கொலைக்கு காரணமான வாலிபரை கைது செய்யக்கோரி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டம்.‌

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள பாட்னாபட்டியைச் சேர்ந்த செல்லதுரை மகள் செல்வபிரியா (வயது 22). மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக இருந்துள்ளார். இவருக்கும்‌ மணப்பாறை அருகே உள்ள செவலூரைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி விவாகரத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பாட்னாபட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் செல்வபிரியா வசித்து வந்த நிலையில் மூன்று நாட்களுக்கு சோலைப்பட்டியில் உள்ள தனது சித்தி லலிதா வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை அப்பகுதியில் உள்ள செட்டிகுளத்தின் கரையில் உள்ள கொன்னை மரத்தில் துப்பட்டாவால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். மணப்பாறை போலீசார் செல்வபிரியா உடலை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் ஶ்ரீரங்கம் ஆர்டிஓ விசாரணையும் நடைபெற்று வந்தது.

இதற்கிடையே செல்வபிரியா உயிரிழப்பிற்கு செவலூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர்தான் காரணம். செல்வபிரியாவை ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றியுள்ளார். எனவே விக்னேஷை கைது செய்ய வேண்டும் எனக்கூறி உடற்கூறாய்வு முடிந்த செல்வபிரியா உடலை உறவினர்கள் வாங்க மறுத்து அரசு மருத்துவமனை முன்பு மணப்பாறை – புதுக்கோட்டை சாலையில் அமர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு கோவில்பட்டி சாலை வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டது. மணப்பாறை போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

இந்நிலையில் இரவு மீண்டும் மணப்பாறை டிஎஸ்பி நடத்திய பேச்சுவார்த்தையில் செல்வபிரியா தற்கொலையில் முறையான விசாரணை நடத்தி நாளைக்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து சாலைமறியல் போராட்டம் இரவு 10.00 மணிக்கு முடிவுக்கு வந்தது. சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.