பத்தாண்டு பா.ஜ.க. ஆட்சியில் 108 முறை பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை உயர்த்தியது: திருச்சி சிவா எம்.பி. பிரச்சாரம்
திருச்சி, ஏப். 16 ஒன்றிய பா.ஜ.க அரசின் 10 ஆண்டு கால ஆட்சியில் 108 முறை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்தியது என்று மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா எம்.பி. பேசினார்.
முசிறி கைகாட்டியில் நேற்று பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரித்து எம்.பி. திருச்சி சிவா பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தின் போது அவர் பேசுகையில், நாடு விடுதலை பெற்ற பின்பு 17 பொது தேர்தல் நடைபெற்றுள்ளது, தற்போது நடைபெறுவது 18 ஆவது தேர்தல். இந்த தேர்தல் முற்றிலும் மாறுபட்ட ஒன்று, இந்த தேர்தலில் நீங்கள் அளிக்கப் போகின்ற ஒற்றை வாக்குதான் எதிர்கால இந்தியா ஒரு ஜனநாயக நாடாக இருக்குமா? அல்லது ஏதேச்சதிகார நாடாக மாறுமா? இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் அண்ணன் தம்பிகளாக வாழுகின்ற நாட்டில் ஒரு மதம் மட்டும் ஆக்கிரமிக்கின்ற நிலை வருமா, தமிழ் தெலுங்கு, பஞ்சாபி, மலையாளம் என எளிமையாய் பேசி இணைந்து இருக்குமா? இந்நாட்டில் ஒரு மொழி மட்டுமே இருக்குமா? இந்தி என்ற ஒரு மொழி மட்டுமே இருக்குமா? என்ற கேள்வி உங்கள் முன்னால், இதெல்லாம் அடிப்படையில் சந்தேகத்தின் பால் எழுப்பப்பட்டவை அல்ல, கடந்த பத்து ஆண்டுகாலமாக டெல்லியில் ஆட்சி செய்து கொண்டிருந்த நரேந்திரமோடி இயற்றிய சட்டங்கள் எல்லாம் சிறுபான்மையருக்கு எதிராக, ஒரு ஆட்சி என்பது நாட்டு மக்களின் சரிசமமாக கருதபட வேண்டிய ஒன்று, இந்திய நாட்டிற்கு உரிய தனிப்பெரும் தன்மை மதசார்பற்ற நாடு என்பது, கூட்டாட்சி தத்துவங்களின் அடிப்படையில் மாநிலங்களின் ஒருங்கிணைப்பில் நடைபெறக்கூடிய நாடு, மாநிலங்களின் தொகுப்பு இல்லை என்றால் இந்தியா என்ற ஒன்று கிடையாது.
நரேந்திர மோடி ஆட்சி பொறுப்பேற்ற இந்த பத்தாண்டு காலத்தில் 108 முறை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, விலைகளை உயர்த்தி உள்ளார். ஒன்றிய அரசு விவசாயிகள் கடனை தீர்க்கவில்லை. மாணவர்கள் பெற்ற கல்வி கடனை தள்ளுபடி செய்யவில்லை. ஆனால் பத்தாயிரம் கோடி கடனை பணக்கார தனி நபர்களுக்கு இந்த மத்திய அரசாங்கம் தள்ளுபடி செய்துள்ளது. மாணவர்கள் மூன்று லட்ச ரூபாய் கடன் வாங்கி திருப்பி செலுத்தவில்லை. அதனால் அவர் எங்கு சென்றாலும் சிபில் உள்ளது என்பதால் தனது பெயரில் பத்து ரூபாய் கடன் கூட வாங்க முடியாத நிலையில் உள்ளனர். ஆனால் ரூ.10 ஆயிரம் கோடி ரூபாய் கடனை தனியாருக்காக ஒன்றிய அரசாங்கம் தள்ளுபடி செய்துள்ளது. இத்தகைய அரசாங்கம் தொடர வேண்டுமா வேண்டாமா மக்கள் தான் தீர்ப்பு சொல்ல வேண்டும். இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் முதலமைச்சர் ஸ்டாலின் கை காட்டும் ஒருவர் தான் பிரதமராக வரும் போது விவசாயிகள் கடனை வட்டியோடு நாங்கள் தள்ளுபடி செய்வோம், மாணவர்கள் வாங்கிய கல்வி கடனை தள்ளுபடி செய்வோம். ஏழை பெண்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வீட்டில் ஒருவருக்கு வருடத்திற்கு ஒரு லட்ச ரூபாய் வழங்குவோம் அவர்கள் வறுமையில் இருந்து மீள்கிற வரை தொடர்ந்து தருவோம் என ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார், இந்தியாவில் 4 கோடி பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். 30 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. 14 லட்சம் பேர் வேலை பார்த்த ரயில்வே துறையில் 12 லட்சம் பேர் தான் இருக்கிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் இரண்டு செயல்களை செயல்படுத்துவோம், முதன்மையாக 30 லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப போகிறோம். இரண்டாவதாக பட்டதாரி இளைஞர்கள், டிப்ளமோ படித்தவர்கள், அரசாங்கத்தில் தங்களை பதிவு செய்து கொண்டால் அவர்களுக்கு தனியார் துறையில் தொடர்ந்து ஒரு வருட காலம் பயிற்சி அளிக்கப்படும். அந்த பயிற்சி காலத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.8,500 வழங்கப்படும். அவ்வாறு பயிற்சி பெற்றவர்கள் திறமையாக இருந்தால் அவர்கள் அதே வேளையில் நிரந்தரமாக்கப்படுவார்கள். கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் நடத்துகிற ஆட்சி ஏழைகளுக்கான ஆட்சி. ஆனால் ஒன்றியத்தில் நரேந்திர மோடி ஆட்சி நடத்துவது பணக்காரர்களுக்கு மட்டுமே. நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தால் வீதியில் ஒரு சாதாரண குடிமகன் விமர்சனம் செய்ய முடியாது. அவ்வாறு விமர்சனம் செய்தால் அவர்கள் கைது செய்யப்படும் நிலை ஏற்படும், நாடாளுமன்றத்தில் எங்களுக்கு பேச அனுமதி இல்லை. நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தை விமர்சிக்கிறோம் என்று சொன்னால் எங்கள் ஒலிபெருக்கி நிறுத்தப்படும். ஒலிபெருக்கி இல்லாமல் சத்தம் போட்டால் இடைநீக்கம் செய்து வெளியாய் தூக்கி எறிவார்கள். நாங்கள் நாடாளுமன்றத்தை முடக்கும் செயலில் ஈடுபடவில்லை. அங்கே உங்களுக்காக நாங்கள் போராடினோம். நாடாளுமன்றத்தில் இந்த நிலை என்றால் எதிர்காலத்தில் இது மாதிரி முச்சந்தில் நின்று பேச முடியாது. எதிர்த்தால் சிறைக்கு செல்ல நேரிடும். அதற்கு அடையாளம் தான் யுஏபிஏ என்ற ஒரு சட்டம். அது என்ன தெரியுமா முன்பெல்லாம் தீவிரவாதி கூட்டத்தில் யாராவது இணைந்து இருந்தால் அவன் தீவிரவாதி,. ஆனால் இப்போது அரசாங்கம் நினைத்தால் ஒரு தனி மனிதனை காட்டி அவனை தீவிரவாதி என விரல் நீட்டினால் அவனை சிறையில் அடைத்து விடுவார்கள். அப்போது அவனுக்கு ஜாமீன் கிடையாது. எத்தனை ஆண்டு சிறையில் இருப்பார்கள் என்பது தெரியாது, இந்த சட்டத்தை எதிர்த்து திமுக போராடியது, காங்கிரஸ் போராடியது. ஆனால் அந்த சட்டத்திற்கு ஆதரவு கொடுத்து வாக்களித்த கட்சி அதிமுக. இன்றைக்கு இந்தியாவின் பல மாநிலங்களில் பல சிறைகளில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள், ஆயிரக்கணக்கான பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் சிறையில் இருக்கிறார்கள். இங்கு இருப்பவர்களுக்கு யாருக்காவது தெரியுமா, இதனை போன்று டெல்லி முதலமைச்சர் சிறையில் இருக்கிறார். இந்த நிலை அங்கு இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, நாளைக்கு நமக்கும் வரலாம். ஆகவே சிந்தித்து செயல்பட்டு வாக்களித்து, உங்களுக்காக போராட எங்களை அனுப்பி வையுங்கள் என பேசி பொதுமக்களிடம்உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டார்.
பிரச்சாரத்தின் போது நகராட்சி துறை அமைச்சர் கே.என். நேரு, முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன், ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், நகர செயலாளர் சிவக்குமார் மற்றும் ஒன்றிய நகர பேரூர் கிளை கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் பங்கேற்றிருந்தனர்.