அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கியவர் கைது

0 43
udhay

திருச்சி, ஏப். 16  திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் அருகே கல்லணை சாலையில் உள்ள மேலவெட்டியில் அரசு பேருந்து ஓட்டுனர் மீது பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை கொள்ளிடம் போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் மருதண்டாக்குறிச்சி சிவசக்தி நகரை சேர்ந்தவர்  பாலசுப்பிரமணியன்(57) . இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் 26 ஆண்டுகளாக ஓட்டுனராக பணி புரிந்து வருகிறார். இவர் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கல்லணை வரை செல்லும் நகர பேருந்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கல்லணைக்கு பாலசுப்பிரமணியன் பார்த்து ஓட்டி சென்றுள்ளார். அந்தப் பேருந்தில் திருச்சி ஸ்ரீரங்கம் தாலுகா சிவசித்திநகர் நடுவெட்டியைச் சேர்ந்த தீனதயாளன் (31) பேருந்தில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தார்.அப்போது ஓட்டுநர் பாலசுப்பிரமணியன் உள்ளே வருமாறு கூறியுள்ளார். இதனையடுத்து ஓட்டுநரிடம் தகராறு செய்துவிட்டு உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என மேலவெட்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி விட்டார். பின்னால் பேருந்து கல்லணை சென்று விட்டு திரும்பி வரும்போது மேலவெட்டி பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி கொண்டிருந்தபோது தீனதயாளன் ஓட்டுனரை கீழே இறங்கி வாடா என தகாத வார்த்தைகளால் திட்டி விட்டு கையில் வைத்திருந்த பாட்டிலால் ஓட்டுநர் பாலசுப்பிரமணியம் தலையில் அடித்துவிட்டு உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதில் காயமடைந்த ஓட்டுனரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பாலசுப்பிரமணியன் கொள்ளிடம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பாட்டிலால் தாக்கிய தீனதயாளனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்

trichymail

Leave A Reply

Your email address will not be published.