இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வருகிற ஜனவரி மாதம் 1-ந்தேதி தகுதி நாளாக கொண்டு வாக்காளர் சுருக்கத் திருத்தம் மேற்கொள்ளும் பணி தொடர்பாக திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட 9 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் தொடர்பான சிறப்பு சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த சுருக்க முறை திருத்தம் தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல் நாளை மறுநாள்(திங்கட்கிழமை) வெளியிடப்படும். அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் வாக்காளர் பட்டியல் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் பொது மக்கள் தங்கள் பெயர் மற்றும் விவரங்களை சரிபார்த்து கொள்ளலாம்.
அடுத்த மாதம் 13 , 14, 27, 28- ந்தேதி ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. அன்று 18 வயது நிரம்பியவர்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து வயது மற்றும் இருப்பிடத்திற்குரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து, புதியதாக வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்த்துக் கொள்ளலாம். இதே போல் அயல்நாடு வாழ் வாக்காளர்கள், மேலும் வாக்காளரது பெயரினை நீக்கம் செய்திடவும் பெயர் திருத்தம் செய்யவும் சட்டப் பேரவைத் தொகுதிக்குள் இடம் பெயர்ந்து புதிய இடத்தில் வசிப்பவர்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.
இது தொடார்பான விண்ணப்பங்கள் நாளை மறுநாள் முதல் அனைத்து வேலை நாட்களிலும், அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்காளர் பதிவு அலுவலர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் வட்டாட்சியர் அலுவலகங்களில் உரிய படிவத்தில் விண்ணப்பங்களை அளிக்கலாம். திருச்சி மாநகராட்சி பகுதிக்குட்பட்டவர்கள், திருச்சி மாநகராட்சி ஆணையர் அலுவலகத்திலும், கோட்ட அலுவலகங்களிலும் விண்ணப்பங்களைக் கொடுக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள www.nvsp.in என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.