திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பொன்னர் இவரது மனைவி லாவண்யா. இந்த தம்பதிக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ள நிலையில் நேற்று லாவண்யா கஞ்சநாயக்கன்பட்டியில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக துவரங்குறிச்சி போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் சிந்துஜாவும் விசாரணை நடத்தினார். இந்நிலையில் வரதட்சணை கொடுமையால் தான் லாவண்யா இறந்து விட்டதாகவும், பொன்னர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும், அவரது மரணத்தில் மர்மம் உள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெண்ணின் உறவினர்கள் மணப்பாறை அரசு மருத்துவமனை எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியலை கைவிட்டனர். இருப்பினும் உடலை இறந்த பெண்ணின் குடும்பத்தினர் பெற்றுக் கொள்ளாமல் சென்ற நிலையில் பொன்னர் குடும்பத்தினர் இளம்பெண்ணின் உடலை வாங்கிச் சென்றனர்.
