வேலா கருணை இல்ல மனநல காப்பகத்தில் தங்கியிருந்தவர் 30 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தினரிடம் இணைந்தார்
திருச்சி மாவட்டம் சமயபுரம் கரியமாணிக்கம் சாலையில் உள்ள வேலா கருணை இல்ல மனநல காப்பகத்தில் தங்கியிருந்தவர் 30 வருடத்திற்கு பிறகு குடும்பத்தினரிடம் இன்று இணைந்தார்.மேலும் இருவரை குடும்பத்தினருடன் ஒப்படைத்தனர்.
திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் உத்தரவுப்படியும், திருச்சி சரக காவல் துறை துணை தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரின் அறிவுரைப்படி கடந்த 2020-.2021 ஆம் வருடங்களில் திருச்சி மாவட்டத்தில் சாலையோரங்களில் சுற்றித்திரிந்த மனநிலை பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு சமயபுரம் வேலா கருணை இல்லம் மனநல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்தனர். இதில் தஞ்சை மாவட்டம்,பட்டுக்கோட்டை தாலுக்கா புனவாசல் பகுதியைச் சேர்ந்த தனிஷ்லாஸ் மகன் 45 வயதான அலன் ஆரோக்கியசாமி கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறினார்.இவரை திருச்சி சோமரசம்பேட்டை பகுதியில் மீட்ட வேலா கருணை இல்ல காப்பக நிர்வாகிகள் கடந்த ஒரு வருடமாக காப்பகத்தில் தங்க வைத்து சிகிச்சை அளித்ததில் குணமடைந்தார்.
அதேபோல் மணப்பாறை தாலுகா,வைரம்பட்டியைச் சேர்ந்த துரைமுருகன் மகன் 35 வயதான
ராஜாவை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறிய இவரை திருச்சி தீரன்நகர் பகுதியில் மீட்டனர். இரண்டரை வருடம் காப்பகத்தில் தங்கி சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து அவரது உறவினர்களின் முகவரியை தெரிவித்ததன் பேரில் சம்பந்தப்பட்ட காவல் நிலையம் மூலம் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் கரூர் மாவட்டம், குளித்தலை,காவேரி நகர் 8வது தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார் இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய இவர் சமயபுரம் நம்பர் 1 டோல்கேட் பகுதியில் சுற்றித் திரிந்த இவரை காப்பக நிர்வாகிகள் மீட்டு ஒரு வருடம் காப்பகத்தில் தங்கி சிகிச்சை அளித்தனர். இதில் குணமடைந்தவர் தனது வீட்டு விலாசத்தை தெரிவித்ததன் பேரில் அவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் அவர்கள் 3 பேரின் குடும் பத்தினரை வரவழைத்து திருச்சி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் மற்றும் வேலா கருணை இல்ல நிர்வாகி ஆகியோர் முன்னிலையில் மூன்று பேரையும் அவரவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். தங்களை பிரிந்து சென்ற மகன்கள் பல வருடங்களுக்கு பிறகு பத்திரமாக தங்களுக்கு கிடைத்ததில் மகிழ்ச்சியடைந்து காப்பக நிர்வாகிகளுக்கு நன்றி கூறி அழைத்துச் சென்றனர்.