கண்ணீரை வரவழைக்கும் புதிய கள்ளிக்குடி மார்க்கெட் கதை! லட்சக்கணக்கில் பணத்தை கட்டிவிட்டு காத்திருக்கும் வியாபாரிகள் – நடவடிக்கை எடுக்கப்படுமா?

0 703
Stalin trichy visit

மீண்டும் நாளை முதல் மார்க்கெட் திறக்கப்படும் என்ற வார்த்தையை கடந்த இரண்டு வருடங்களாக கேட்டு கேட்டு வியாபாரிகள் சலைத்துபோய் விட்டனர். திருச்சி புதிய கள்ளிக்குடி மார்கெட்டில் கடை வாங்கி தவிக்கும் வியாபாரிகள், எங்களுக்கு காந்தி மார்க்கெட் மாற்றவில்லை என்றாலும் பரவாயில்லை. தற்போது நாங்கள் கடை எடுத்த தொகைக்கு ஏதாவது ஒரு கடை வைத்து பிழைப்பு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சரிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் தொடர்ந்து கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.மூன்று வருடங்களாக போராடியும் தற்போது முடங்கிப்போயிருக்கும் கள்ளிக்குடி மார்க்கெட்டின் கதை என்ன? இதுமட்டுமல்லாமல் மணிகண்டம் முதல் புதிய மார்க்கெட் அமைந்துள்ள பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது‌. எதற்காக அந்த பாலம் அமைக்கும் பணிகள்? 77 கோடி ரூபாயில் மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட கட்டிடம் காற்று வாங்கிக் கொண்டிருக்கிறது. அங்கு கடை எடுத்தவர்கள் என்ன சொல்கிறார்கள்… என்பதை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு!

 

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் நிலவும் இட நெருக்கடி, போக்குவரத்து நெரிசல் மற்றும் காய்கறி கழிவுகளால் விளையும் சுகாதாரச் சீர்கேடு ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், மணிகண்டம் அருகே கள்ளிக்குடியில் ரூ.77 கோடியில் 10 ஏக்கரில் நவீன வசதிகளுடன் 19 வரிசை கட்டிடங்களில் 1,000 கடைகள் அடங்கிய காய்கறி, பழங்கள், மலர்களுக்கான மத்திய வணிக வளாகம் கட்டப்பட்டு, கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைக்கப்பட்டது.

இதனிடையே 2018ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி முன்னாள் அமைச்சர்கள் என்.நடராஜன், எஸ்.வளர்மதி ஆகியோர் கள்ளிக்குடியில் சில வணிகர்களைக் கொண்டு முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தனர். ஆனால், எதிர்பார்த்த வியாபாரம் ஆகாததால் சில மாதங்களிலேயே அவர்களும் காந்தி மார்க்கெட் பகுதிக்கே மீண்டும் திரும்பிவிட்டனர்.

தொடர்ந்து, வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று தரைத்தளத்தில் மட்டும் இரு கடைகளுக்கு நடுவில் இருந்த சுவர் அகற்றப்பட்டு ஒரு கடையாக மாற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தரைத் தளத்தில் இருந்த 500 கடைகள் 330 ஆக குறைக்கப்பட்டன. ஆனால், அதன்பிறகும் கள்ளிக்குடி மத்திய வணிக வளாகத்துக்கு காந்தி மார்க்கெட் வியாபாரிகள் செல்லவில்லை. இதனால், 830 கடைகளும் காலியாகவே இருந்து வந்தன. இதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 207 கடைகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டன. எஞ்சிய 623 கடைகளை வியாபாரிகளுக்கு ஒதுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது அது ஒரு கதை!

கடைகளைப் பெற்று 2 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தாமல் இருப்பதும், வாடகை செலுத்தாமலும் ஒப்பந்தத்தைப் புதுப்பிக்காமல் உள்ளதும், ஒப்பந்த ஆவண நிபந்தனைகளுக்கு எதிரானது. எனவே கள்ளிக்குடி வணிக வளாகத்தில் தங்களுக்கு வழங்கப்பட்ட கடை ஒதுக்கீடு ரத்து செய்யப்படுகிறது. கடையின் சாவி மற்றும் கடையுடன் ஒப்படைக்கப்பட்ட தளவாடங்களை நல்ல முறையில் வணிக வளாகப் பொறுப்பாளரிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகமும் ஒரு சமயத்தில் கூறியது. கள்ளிக்குடி மார்க்கெட்டில் கடைகளைப் பெற்றவர்கள் அவற்றைத் திறக்க வேண்டுமென இதற்கு முன் ஆட்சியராக இருந்த கு.ராசாமணி தலைமையில் 3 முறையும், தற்போது மாவட்ட ஆட்சியராக உள்ள சு.சிவராசு தலைமையில் 2 முறையும், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை ஆணையர் சிரு தலைமையில் ஒரு முறையும் வியாபாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டு இன்றளவும் ஆலோசனைகள் மட்டுமே போய்க்கொண்டிருக்கிறது….

இதற்கிடையில் தான், கள்ளிக்குடி மத்திய வணிக வளாகத்தைத் திறக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சில மாதங்களுக்கு முன் திருச்சி மாவட்ட மனித வளர் சங்கம் சார்பில் முன்னாள் அமைச்சர் கு.பா.கிருஷ்ணன் தலைமையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது அடுத்த விசாரணைகளும் நடந்து முடிந்தது.மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் முடிவுகள் பரபரப்பை ஏற்படுத்த அப்போது மட்டும் புதிய கள்ளிக்குடி மார்க்கெட் திறக்கப்பட்டது. இங்கு காந்தி மார்க்கெட்டை பொருத்தவரை வியாபாரிகள் மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் தொடர் போராட்டத்தையும் நாங்கள் அங்கு செல்ல மாட்டோம் என்று பிடிவாதத்திலும் இருந்து வந்தனர்.

இதற்கிடையே ஆட்சி மாற்றம் ஏற்பட கள்ளிக்குடி மார்க்கெட்டின் கதை அப்படியே அமைதியானது. அங்கு கடை எடுத்த 250க்கும் மேற்பட்ட வியாபாரிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். ஒருபுறம் எடுத்த கடைக்கு 80,000 முதற்கொண்டு வாடகையும் மாதமாதம் மின்சார வரியையும் தொடர்ந்து பிடித்துக் கொண்டிருக்கின்றனர். பொதுமக்களே வராத கடைக்கு மாதமாதம் கண்ணீருடன் வாடகை கட்டுவதாகவும் பலர் புலம்பி வருகின்றனர்.

இதுகுறித்து கள்ளிக்குடி மார்க்கெட்டில் கடை எடுத்த பிரிட்டோவிடம் பேசினோம்…. நான் இங்கு கல்லுகுடி மார்க்கெட்டில் கடை எடுத்து இரண்டு வருடமாகிறது. இன்று வரை கடைக்கு சுமார் 86 ஆயிரம் வரை வாடகை கட்டி உள்ளேன். மாவட்ட நிர்வாகமும் அரசாங்கமும் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காந்தி மார்க்கெட்டை மாற்ற வில்லை என்றாலும் பரவாயில்லை எங்களுடைய வாழ்வாதாரத்தை காப்பதற்காக வேறு ஏதாவது நடவடிக்கை எடுத்து தர வேண்டும்” என்றார்.

அதே கள்ளிக்குடி மார்க்கெட்டில் முதால் ஆளாக கடை வாடகைக்கு எடுத்த ராமசாமியிடம் பேசினோம்… கள்ளிக்குடி புதிய மார்க்கெட்டில் முதலாவது கடையே என்னுடையது தான். மாதம் மட்டும் ரூ.25,000 வாடகை செலுத்தி வருகிறேன். தற்போது வரை சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமாக வாடகையை கொடுத்துள்ளேன். மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் வர நடவடிக்கை எடுக்காமல் வாடகையை மட்டும் மாதாமாதம் சரியாக வாங்கிக் கொள்கின்றனர். நாங்கள் எல்லோருமே கள்ளிக்குடி மார்க்கெட் திறந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தான் இன்றளவும் காத்திருக்கிறோம். உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுத்தால் எங்களின் வாழ்வாதாரம் காக்கப்படும்” என்றார். மேலும் இதுகுறித்து கள்ளிக்குடி மார்க்கெட்டில் கடை எடுத்திருந்த வியாபாரி சக்தியிடம் பேசினோம்…. “தற்போது இந்த காந்தி மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள் கள்ளிக்குடி மார்க்கெட்டிற்கு செல்வதற்கான சாத்தியக்கூறுகள் எதுவுமே இல்லை. கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கும் இனிகோ இருதயராஜ் அதே இடத்தில் புதுப்பித்து கட்டித் தருவதாகவும் கூறியுள்ளார். நான் புதிய மார்க்கெட்டில் கடை எடுத்து இரண்டு வருடங்களுக்கு மேலாக சுமார் ஒரு லட்சம் ரூபாயை மாவட்ட நிர்வாகத்திடம் கொடுத்துவிட்டு திறப்பார்கள் திறப்பார்கள் என காத்துக் கொண்டிருக்கிறேன்”என்றார்.


இப்படியாக காந்தி மார்க்கெட் வியாபாரிகள் ஒருபுறமும், கள்ளிக்குடி மார்கெட் கதையின் ஒரு புறமாக சென்று கொண்டிருக்கும்போது மாவட்ட நிர்வாகம் அமைதி காப்பது அதிர்ச்சியின் உச்சகட்டமாக இருக்கிறது. இதேவேளையில் மார்க்கெட் அமைந்திருக்கும் அப்பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் தற்போது மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருக்கும் கே.என்.நேரு பஞ்சப்பூர் அருகில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கான இடத்தினையும் ஆய்வு செய்த நேரத்தில், அதற்கு அருகிலேயே இருக்கும் கள்ளிகுடி மார்க்கெட்டிற்கு விடிவு காலம் பிறக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

Leave A Reply

Your email address will not be published.