திருச்சியில் உலர் துறைமுகம் அமைக்க திட்டமுன்மொழிவை தயாரிக்க தமிழக அரசை ஒன்றிய அரசு கேட்டு கொண்டுள்ளது : துரை வைகோ பேட்டி
திருச்சி, ஆக. 29 திருச்சியில் உலர் துறைமுகம் அமைப்பதற்கான திட்ட முன்மொழிவை தயாரிக்க வேண்டும் என ஒன்றிய அரசு தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளது – திருச்சி எம் பி துரை வைகோ பேட்டி
திருச்சி எம்.பி துரை வைகோ இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அதில் திருச்சியில் உலர் துறைமுகம் அமைப்பதற்கு கடந்த ஓராண்டுக்கு மேலாக ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகிறேன். இது தொடர்பாக ஒன்றிய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் சர்பானந்தா சோனாவால், பியூஸ் கோயல் உள்ளிட்டவர்களை அவ்வப்போது சந்தித்துள்ளேன்.
நிர்மலா சீதாராமன் திருச்சியில் உலர் துறைமுகம் அமைப்பது மிகவும் நல்ல முடிவு என தெரிவித்தார். அதே நேரத்தில் தமிழ்நாடு அரசிடம் இருந்து ஒன்றிய அரசுக்கு இது தொடர்பாக எந்த ஒரு திட்ட முன்மொழிவும் வரவில்லை என அதிகாரிகளும் அமைச்சர்கள் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.
முக்கிய துறைமுகங்களுக்கு தமிழ்நாடு நெருக்கமாக இருப்பதால் தமிழ்நாடு Red zone என வகைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் புதிய உலர் துறைமுகம் அமைக்க அனுமதிக்கப்படாது என்றும் சிறப்பு வழக்காக கருதப்பட்டால் மட்டுமே அதனை முன்னெடுக்க முடியும் என ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. திருச்சியில் உலர் துறைமுகம் அமைக்க வேண்டியதன் அவசியத்தையும் இதனால் தொழில் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சி குறித்தும் நான் எடுத்துரைத்தேன். இதனையடுத்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திருச்சியில் உலர் துறைமுகம் அமைக்கும் திட்டத்தை பரிசீலனையில் இருப்பதாக உறுதி அளித்தார். இது தொடர்பாக முதலமைச்சர் விஜயை சந்தித்த பொழுதும் அவரிடம் எடுத்துரைத்தேன்.
இந்த நிலையில் தற்போது ஒன்றிய நிதி அமைச்சர்களிடம் இருந்து எனக்கு ஒரு அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது அதன்படி திருச்சியில் உலர் துறைமுகம் அமைப்பது தொடர்பான எனது கோரிக்கையை தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு ஒன்றிய அரசு சார்பில் அனுப்பி உள்ளதாகவும் அதற்கான உள்கட்டமைப்பு திட்டத்தை தமிழ்நாடு அரசு திட்டமிட்டு தொடங்க வேண்டும் என கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசு இணைந்து இந்த திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இவ் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு விரைந்து நிலத்தை அடையாளம் கண்டு ஒன்றிய அரசுக்கு தெரிவிக்க வேண்டும். உலர் துறைமுகம் திருச்சியில் அமைக்கப்பட்டால் திருச்சி மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொழில் மற்றும் ஏற்றுமதி துறைகள் மிகப்பெரிய பயனடையும்.
தொழில் முதலீடுகளை அதிக அளவு ஈர்க்க முடியும்.
இந்த உலர் துறைமுகத்தின் மூலம் நேரடியாக 2000 வேலை வாய்ப்புகளும் மறைமுகமாக பத்தாயிரம் வேலைவாய்ப்புகளும் கிடைக்கும்.
உலர் துறைமுகம் அமைக்கப்பட்டால் அதிக தொழிற்சாலைகள் வருவதற்கான வாய்ப்புகள் உருவாகும் அதன் மூலமும் வேலை வாய்ப்புகள் பெருகும் எனவே தமிழ்நாடு அரசு இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
ஏற்கனவே திருப்பூரில் சுமார் 21 ஏக்கர் பரப்பளவில் உலர் துறைமுகம் உள்ளது. திருச்சியில் அதேபோல ஒரு உலர் துறைமுகம் அமைக்கலாம் அதே நேரத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்கான வளர்ச்சியை மையப்படுத்தி சுமார் 100 ஏக்கர் அளவில் உலர் துறைமுகம் அமைத்தால் சிறப்பாக இருக்கும் அதற்கான ஒரு சில இடங்கள் உள்ளது. அதை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளேன்.
திருச்சியில் உலர் துறைமுகம் அமைக்க 100 சதவீதம் சாத்திய கூறுகள் உள்ளது என தெரிவித்தார்