தாய்ப்பால் தானமாக வழங்கிய சாதனைப் பெண்ணுக்கு பாராட்டு
திருச்சி, ஆக.27 அம்மன் நகர் விநாயகர் ஆலய விநாயகர் சதுர்த்தி விழாவில், தாய்ப்பால் தானம் தந்த அப்பகுதி சாதனைப் பெண்மணிக்கு பாராட்டு
திருச்சி திருவெறும்பூரையடுத்த காட்டூர் – அம்மன் நகர், இஞ்சிமரத்தடி அருள்மிகு ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தில், இன்று விநாயகர் சதுர்த்தி விழா வெகுசிறப்பாக நடைபெற்றது. காலை ஆலய வளாகத்தில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டு, உற்சவருக்கு சிறப்பு அலங்காரமும் ஆராதனைகளும் நடைபெற்றன.
இவ்விழாவில் கோகுல நகர் பகுதியில் வசித்து வரும், இரண்டு ஆண்டுகளில் 300 லிட்டர் தாய்ப்பாலைத் தானமாக வழங்கி, ஆசியாவின் முதல் சாதனைப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றிருக்கிற, பொறியியல் பட்டதாரியான திருமதி செல்வபிருந்தா வுக்கு, அம்மன் நகர் நலச் சங்கத்தின் சார்பில், பாராட்டு விழா நடைபெற்றது. அவருடைய அர்ப்பணிப்பு மிக்கத் தொண்டுள்ளத்தை நகர்வாசிகள் வெகுவாகப் போற்றிப் பாராட்டி மகிழ்ந்தனர்.
அப்பெண்மணி தானமாகத் தந்த தாய்ப்பால், திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனை பால் வங்கியில் சேகரிக்கப்பட்டு, தாய்ப்பால் கிடைக்காத பல பச்சிளம் குழந்தைகளுக்கு, உயிர் காக்கும் மருந்தாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.