திருச்சி என்.சிவாவின் – சிந்தனையும் செய்தியும்
திருச்சி என்.சிவாவின் – சிந்தனையும் செய்தியும்
‘ஒருவரை ஒருவர் நேசிப்போம்.
இன்றைய தலைமுறைக்கு முன்னால் ஒரு மிகப்பெரிய கேள்வி இருக்கிறது. நாம் மனிதகுலத்ததுக்கு முடிவு கட்டப் போகிறோமா? அல்லது மனித இனத்தை அழிப்பதற்காக நடந்து கொண்டிருக்கிற போர்களுக்கு முடிவு கட்டப் போகிறோமா?
வல்லரசுகள் என்கிற நாடுகள் உருவாக்கி வைத்திருக்கின்ற ஆயுதங்கள் ஒரு நொடியில் பல இலடசம் மக்களைக் கொன்று குவிக்கின்ற அளவிற்கு ஆயுதங்களை வைத்திருக்கின்ற நாடுகளைப் பார்த்து உலகம் அஞ்சத் தொடங்கியிருக்கிறது.
கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும். விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்துவிட்டது; பொருளாதாரம் உயர்ந்துவிட்டது. மனித வாழ்க்கை முன்னைவிட எவ்வளவோ மேல் என்றெல்லாம் பேசுகின்ற நம்முடைய மனம் பக்குவப்பட்டிருக்கின்றதா?
நம்முடைய உறவின் நெருக்கத்தில் யாராவது மறைந்துபோனால் துடிக்கின்ற உள்ளம், ஊரிலே கொத்துக் கொத்தாக மக்களைக் கொல்கின்ற போரைப்பற்றி ஏன் சிந்திப்பதில்லை?
தனக்கு ஏற்படுகின்ற இன்னல் தன்னைப் பாதிக்கின்றவரை யாரும் அதைப்பற்றி உணரத் தலைப்படுவதே இல்லை. காலங்காலமாக இதைச் சொல்லி வருகிறார்கள்.
இன்றைக்கு அதிக அளவிற்கு அணு ஆயுதங்களை வைத்திருக்கின்ற அமெரிக்க நாட்டை ஒரு காலத்தில் ஆண்ட ‘ஐசன் ஹோவர்’ பேசுகிற போதுகூடப் பல நேரங்களில் இதைக் கண்டித்திருக்கிறார்.
உலகத்தை அச்சுறுத்துகின்ற அணு ஆயுதப் போரை, மக்களுடைய எதிர்காலத்தை அழித்துவிடும் என்கின்ற பீதியை உருவாக்குகின்ற போர்களை நிறுத்துவதற்கு நாம் அனைவரும் ஒன்று சேரவேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.
ஒவ்வொரு துப்பாக்கியும், ஒவ்வொரு போர்க் கப்பலும், ஒவ்வொரு ஏவுகணையும் உடுக்க உடையின்றி, உண்ண உணவின்றி வாழ்கின்ற மக்களிடமிருந்து திரட்டப்பட்ட பணத்திலே இருந்து செய்யப்படுகின்றன என்பதை யார் எண்ணிப் பார்க்கிறார்கள்?
மக்களின் வாழ்வுக்கு வழிகோல வேண்டிய அரசாங்கங்கள் ஆயுதங்களைத் தயாரிப்பதிலே கவனம் செலுத்தி இன்னொரு நாட்டை அச்சுறுத்துகின்ற எல்லைக்குச் செல்லுமேயானால் அதனுடைய அடிப்படைக் காரணம் நம்முடைய மனம் இன்னும் விரிவாகவில்லை என்பது.
‘பெட்ரான் ரஸ்ஸல்’ என்கின்ற மிகப்பெரிய அறிஞர் பேசுகின்ற நேரத்ததிலே கலக்கத்தோடு சொல்கின்றார், “நான் ஓர் ஐரோப்பியனாக, ஒரு குறிப்பிட்ட நாட்டைச் சார்ந்தவனாகப் பேசவில்லை; நான் மனித குலத்தைச் சார்ந்த ஒரு மனிதனாக மன்றாடிக் கேட்கிறேன்”, என்று.
ஒரு ‘பெர்த்தியத்’ தத்துவ அறிஞராகக் கருதப்பட்ட ரஸ்ஸல் பேசுவதைக் கேட்கிறபோது இன்று நேற்றல்ல, பல பேர் இது குறித்துக் கவலை கொள்கிறார்கள். இன்றைக்கு நாம் இது குறித்துப் பேசுகிறபோதுகூட ஆம் என்று ஆமோதிப்பவர்கள் இருப்பார்கள். ஆனால், நாம் செய்யப்போவது என்ன?
ஒருவரை ஒருவர் நேசிக்க வேண்டும்; ஒரு நாடு இன்னொரு நாட்டோடு கொண்டிருக்கின்ற பகை உணர்வை அறுத்தெரிய வேண்டும்; எல்லோரும் ஒன்று என்று கருதுகின்ற மனநிலை வளர வேண்டும்.
இன்றைக்கு ஒரு போர் என்று சொன்னால் அதற்கு ஆகின்ற செலவு என்பதைவிட, அதனாலே ஏற்படக்கூடிய இழப்பு, அதிலேயிருந்து மீண்டு ஒரு நாடு எழுந்து நிற்கின்ற அந்த நிலைமைக்கு எவ்வளவு பாடுபட வேண்டியிருக்கிறது.
ஜப்பானிலே இரண்டாவது உலக யுத்தத்தின்போது வீசப்பட்ட குண்டிலே இருந்து, அதன் தாக்குதலிலிருந்து இன்னும் அவர்கள் முழுமையாக விடுபடவில்லை.
இதேபோல உலகின் பல பகுதிகளில் நடந்திருக்கின்றன.
நான் மன்றாடிக் கேட்கின்றேன். நமக்கு முன்னால் இருக்கின்ற பல்வேறு பிரச்சனைகள், அன்றாட வாழ்வு அடிப்படைத் தேவைகள், எதிர்கால வாழ்வு எண்ணற்ற ஏக்கங்கள், ஆசைகள், கனவுகள் என்பதைக் கடந்து உலகம் அமைதியாக வாழ வேண்டும்.
அழிந்துபோனது உலகம், மனிதனுடைய சீற்றத்தால், ஆசையால், வேட்கையால் என்கின்ற உணர்வுகள் கொஞ்சமாவது தடைப்பட வேண்டுமென்றால் நம் ஒவ்வொருவருடைய பங்கும் செலுத்தப்பட்டாக வேண்டும்.
சிந்தியுங்கள் தோழர்களே! ஒருவரை ஒருவர் நேசிக்க வேண்டும். போர்கள் என்பது இந்த நாட்டில் இந்த உலகத்தில் இல்லாது போக வேண்டும். எல்லோரும் ஒத்த உணர்வோடு வாழ்வோம் என்றால் நம்முடைய எதிர்கால வாழ்வு எவ்வளவு சிறப்பாகச் செழிப்பாக இருக்கும்.
சுருக்கமாகத்தான் சொல்ல முடிகிறது. மிகுதியை உங்கள் சிந்தனைக்கு விடுகிறேன். சிந்தனையின் விளைவு, எதிர்காலம் மக்களின் மனம், மலர்களின் இதழ்களைப்போல விரிந்து மணம் வீசுகின்ற ஒரு சமுதாயமாக மாறுவதற்கு நாம் அனைவரும் எண்ணி ஒத்துழைக்க வேண்டும்.
சிந்தியுங்கள்; செயல்படுங்கள்.