திருச்சி மாநகராட்சி மாமன்ற அவசரக்கூட்டம்

0 332
Stalin trichy visit

திருச்சி, மே 25. திருச்சி மாநகராட்சி மாமன்ற அவசரக்கூட்டம்  மேயர் மு. அன்பழகன் தலைமையில் இன்று நடந்தது. ஆணையாளர் முஜிபூர் ரகுமான், துணை மேயர் திவ்யா மற்றும் மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு
மாமன்ற உறுப்பினர் சுரேஷ் (சி.பி.அய்.) எனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறது. இதனை உடனே சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மேயர் அன்பழகன்;ஏற்கனவே சாலைகளை சீரமைக்க ரூ 46கோடிக்கு 10 மாதத்திற்கு முன்பே ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டுள்ளது. இதில் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அதிகாரிகளை கேட்டிருக்கின்றேன். இனிமேல் மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடைக்கு குழிகள் தோண்டும் போது அந்தப் பகுதி வீட்டு இணைப்புகளை முற்றிலுமாக முடித்துவிட்டு சாலைகளை போட்டுவிட்டு தான் அடுத்த வேலைக்கு செல்ல வேண்டும் என உத்தரவிட்டு உள்ளேன் என்றார்.
மாமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் (அ.ம.மு.க.) திருச்சி மாநகராட்சி பகுதியில் வெளியேற்றப்படும் கழிவுநீர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பஞ்சப்பூர் கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது. ஆகவே புதிய பேருந்து நிலையம் அமையும் நிலையில் அந்த பகுதியில் மண் பரிசோதனை மேற்கொண்டு இருக்கிறீர்களா? என்று கேள்விக்கு ஆணையர் முஜிபுர் ரகுமான் பதிலளித்து பேசுகையில், 2 அடி ஆழத்துக்கு மண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு தகுதியான இடம் என முடிவுகள் வந்துள்ளன. பேருந்து நிலையம் பகுதியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் முழுமையாக மூடப்பட்டு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் புதிய கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் 120 எம்.எல்.டி. கொள்ளளவில் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்
எல்.அய்.சி. சங்கர் (சுயேட்சை) மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் ஒப்புந்தப்புள்ளி விபரங்கள் முன்கூட்டியே ஏன் மாமன்ற உறுப்பினர்களுக் தெரியப்படுத்தவில்லை. மாநகராட்சி இணையதளத்திலும் அதனை வெளியிட வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்து மேயர் மு.அன்பழகன் பேசும் போது, மாமன்ற உறுப்பினர்களுக்கு முறையாக தெரியப்படுத்தப்படும் என்றார.
மாமன்ற உறுப்பினர் ஜவகர் (காங்) சிறீரங்கம் பகுதியில் நகரப் பேருந்துகள் வந்து செல்லும் அளவிற்கு ஒரு பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு தேவையான இடம் அங்கு இருக்கின்றது. அதனை வந்து மேயர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றார். மேயர் மு.அன்பழகன் : ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.சிறீரங்கம் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களுக்கு நுழைவு வரி வசூலிக்க அறிவிக்கப்பட்டது. ஆனால் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெளியூர் ,வெளி மாநில பக்தர்களின் நலன் கருதி அந்த டெண்டர் ரத்து செய்யப்படுகிறது. கவிதா செல்வம் (திமுக) மாமன்ற உறுப்பினர்கள் வார்டு மேம்பாட்டிற்கு நிதி குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் ஆவது ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேயர் மு.அன்பழகன் : இதுதொடர்பாக ஏற்கெனவே அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. வருகிற நிதிநிலை அறிக்கையில் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.
மாமன்ற உறுப்பினர் சுரேஷ் : அபிசேகபுரம் கோட்டத்தில் மட்டும் 5 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறையை கட்டுவதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இது தொடர்பாக கல்வி குழுவில் முடிவு எடுக்கப்படவில்லை.
மேயர் மு.அன்பழகன் : மாநகராட்சி கல்விக்குழு அமைப்பதற்கு முன்பாகவே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து கோட்டங்களிலும் உள்ள மாநகராட்சிப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறையை துவங்கப்படும்.
மாமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் : மாநகராட்சிபள்ளிகளில் மாணவிகளின் நலன் கருதி நாப்கின் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மண்டல குழு தலைவர் மதிவாணன் : இந்த திட்டம் பள்ளி கல்வித்துறையின் பரிசீலனையில் உள்ளது. அரசுப்பள்ளிகளில் நாப்கின் வைக்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறார்.
மேயர் மு.அன்பழகன் : மாநகராட்சியில் பள்ளிகளை மேம்படுத்துவதற்கான நிதி போதுமான அளவில் இருக்கின்றது. ஆகவே கல்வி குழுவில் இடம்பெற்றுள்ள கவுன்சிலர்கள் மற்றும் அந்தந்த பகுதி மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள மாநகராட்சி பள்ளிகளின் அடிப்படை தேவைகளை எழுத்துப்பூர்வமாக கொடுத்தால் உடனடியாக அதற்கு தீர்வு காணப்படும் என்றார்.
மாமன்ற உறுப்பினர் நாகராஜ்(திமுக) : எனது வார்டில் நான்கு மாதத்திற்கு முன்பு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டும் புதிய கழிப்பிடம் கட்ட பழைய கழிப்பிடத்தை ஒப்பந்ததாரர் இடித்து தள்ளி விட்டார். அதன் பின்னர் எந்த பணிகளையும் அவர் செய்யவில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நான் மாமன்ற உறுப்பினராக பதவியேற்ற பின்னர் இரண்டு மாதமாக குடிதண்ணீரை வரவில்லை.
மேயர் மு.அன்பழகன் : அந்த ஒப்பந்ததாரர் யாரென்று பார்த்து உடனடியாக அவரை கருப்பு பட்டியலில் சேர்த்து வேறு டெண்டர் விட்டு அந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். தண்ணீர் வரவில்லை என்று சொல்லாதீர்கள். தண்ணீர் குறைந்த அளவில் வருகிறது என்பதை ஒத்துக் கொள்ளுங்கள். சீராக தண்ணீர் வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாமன்ற உறுப்பினர் சுபா (திமுக) : எனது வார்டில் உள்ள பல அங்கன்வாடி மய்யங்கள் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. சமீபத்தில் செட்டிப்பட்டி அங்கன்வாடி மய்யத்தில் பாம்பு ஒன்று நுழைந்துவிட்டது. ஆகவே சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேயர் மு. அன்பழகன் இப்போது தான் சொல்கிறீர்கள். என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறது என்பதை எழுத்துப்பூர்வமாக கொடுங்கள். உடனே சரி செய்கிறோம் என்றார் இந்த மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் பஞ்பப்பூரில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து முனையம், கனரக சரக்கு, வாகனம் முனையம் உள்கட்டமைப்பு வசதிகள் ரூ 350 கோடியில் அமைக்க நகராட்சி நிர்வாக இயக்குநர் மற்றும் தமிழ்நாடு அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.