திருச்சி மாநகராட்சி 2026 -27 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் : அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு
திருச்சி, பிப். 26 திருச்சி மாநகராட்சி 2026-27 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் – கடந்த பட்ஜெட்டில் கூறிய திட்டங்களை நிறைவேறவில்லை என அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு!
திருச்சி மாநகராட்சியின் 2026-27 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் இன்று நடைபெற்றது. மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நிதி குழு தலைவர், கவுன்சிலர் முத்துச்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்நிகழ்வில் துணை மேயர் திவ்யா, மாநகராட்சி ஆணையர் மதுபாலன் மற்றும் திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகளின் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் கூறப்பட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் உள்ளது எனக் கூறி அதிமுக கவுன்சிலர்கள் அம்பிகாபதி அரவிந்தன் ஆகியோர் பட்ஜெட் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் கவுன்சிலர்கள் அம்பிகாபதி, அரவிந்தன் அளித்த பேட்டியில்:-
கடந்தாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் செயல்படுத்தாமல் அனைத்தும் ஏட்டளவிலே உள்ளது. பஞ்சப்பூர் பேருந்து நிலைய கட்டுமான பணிகளுக்கு, திருச்சி மாநகராட்சியின் பங்களிப்பு தொகை இல்லாமல், மேற்கொண்டு 200 கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர். மேலும் குறிப்பாக காந்தி மார்க்கெட் புணரமைப்பது, உயர்மட்ட பாலங்கள் அமைப்பது, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பது உள்ளிட்ட பல்வேறு பல்வேறு திட்டங்களுக்கு கடந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
இந்த வருடமும் இதே போல் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டும் ஏட்டளவில் தான் இருக்கும். எந்த திட்டங்களையும் செயல்படுத்த போவதில்லை. வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சி அமைத்து திருச்சி மாநகராட்சி அதிமுக கையில் எடுக்கும் பொழுது, அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தப்படும் என தெரிவித்தனர்.