முதல்வர் விஜய்க்கு திருச்சி கேங்மேன் சங்கம் உருக்கமான கோரிக்கை

0 12
Stalin trichy visit

திருச்சி, செப்.19  கேங்மேன் அனைவரையும் கள உதவியாளர்களாக அறிவிக்க வேண்டுமென முதல்வர் விஜய்க்கு திருச்சி கேங்மேன் சங்கம் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி தென்னூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அலுவலகத்தில் கேங்மேன் மற்றும் பணியாளர் சங்கத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார்..

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 2021-ஆம் ஆண்டு கேங்மேன் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டு தொழில்நுட்பம் அல்லாத பணிகளுக்காக 9,613 பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் கடுமையான ஆள் பற்றாக்குறை காரணமாக நாங்கள் ஆபத்தான தொழில்நுட்பப் பணிகளிலும், மின்சாரம் பாயும் பகுதிகளிலுமே ஈடுபடுத்தப்பட்டு வருகிறோம். இதனாலேயே இதுவரை 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஆறு வருடங்களாக 9,613 கேங்மேன்களையும் கள உதவியாளர்களாக மாற்ற வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்துத் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறோம். கடந்த மார்ச் 14-ஆம் தேதி நடைபெற்ற ஊதிய உயர்வு ஒப்பந்தத்தின் போது கேங்மேன் அனைவரையும் கள உதவியாளர்களாக மாற்றித் தருவதாக வாரியமும் அரசும் முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் இதை நிறைவேற்றித் தருவதாக உறுதியளிக்கப்பட்ட நிலையில், தற்போது இக்கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனை வலியுறுத்தி சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூன் 15, 16 ஆகிய தேதிகளில் போராட்டம் நடத்தினோம். அப்போது மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமாரிடம் கோரிக்கை வைத்தபோது, ஒரு மாத கால அவகாசம் கேட்டதால் போராட்டத்தைக் கைவிட்டோம். ஆனால் நான்கு மாதங்கள் கடந்தும் இதுவரை எந்தப் பதிலும் இல்லை மின் விபத்துகளால் தொழிலாளர்களின் உயிரிழப்புகளும் தொடர்கின்றன.

எனவே, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, 9,613 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் எங்களை கள உதவியாளர்களாக மாற்ற ஆணையிட வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள கேங்மேன் பணியாளர்கள் அனைவரும் தமிழக வெற்றிக்கழக அரசின் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளோம் எனத் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.