300 லிட்டர் தாய்ப்பால் வழங்கிய திருச்சி பெண்மணி உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார்

0 241
Stalin trichy visit

திருச்சி, ஆக.7  300 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்த ஆசியாவின் முதல் திருச்சி பெண்மணிக்கு குவியும் பதக்கங்கள், பாராட்டுக்கள்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்த காட்டூர் அம்மன் நகர் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வ பிருந்தா. பொறியியல் பட்டதாரியான இவர் கடந்த 2016 ஆம் ஆண்டில் பிரவீன்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு பிரனீத் என்ற ஆண் குழந்தையும், பிரணிக்கா என்ற 2 வயது பெண் குழந்தையும் உள்ளது.

பெண் குழந்தை பிறந்தவுடன், குழந்தையின் உணவு தேவையைக்காட்டிலும் கூடுதலாக தாய்ப்பால் சுரக்கத் தொடங்கியது. பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலின் தேவை குறைவு என்பதையும், அந்த குழந்தை வளர வளர தாய்ப்பாலின் தேவை அதிகரிக்கும் என்பதையும் செல்வப் பிருந்தா புரிந்து கொண்டார்.

அப்போது, அரசு மருத்துவமனைகளில், குறை பிரசவத்தில் பிறந்த பல குழந்தைகள் பலகீனமாகவும், நோய் வாய்ப்பட்டும், தாய்ப்பால் கிடைக்காமல் உயிருக்கு ஆபத்தான நிலையிலும் சிகிச்சை பெற்றுவருவது செல்வ பிருந்தாவுக்கு தெரியவந்தது. சிகிச்சையில் உள்ள அத்தகைய குழந்தைகளுகளின் பசியைப் போக்கி, அவர்களது நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்து, அவர்களது உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் வல்லமை தாய்ப்பாலுக்கு உண்டு என்பதை செல்வ பிருந்தா புரிந்துகொண்டார். தான் பெற்ற குழந்தையின் உணவுத் தேவைக்கு அதிகமாக சுரந்த தாய்ப்பாலினை, மருத்துவர்களின் வழிகாட்டலுடன், ‘அமிர்தம் தாய்ப்பால் தானம்’ என்ற அரசு சாரா தொண்டு நிறுவனத்தின் துணையுடன் தானம் கொடுக்க தொடங்கினார்.

அவ்வாறாக கடந்த இரண்டு ஆண்டுகளில் 300.17 லிட்டர் தாய்ப்பாலை தானமாக கொடுத்ததன் பயனாக திருச்சி அரசு பொது மருத்துவமனையில் தாய்பாலுக்காக ஏங்கி தவித்த எண்ணற்ற குழந்தைகள் உயிர் பெற்றுள்ளனர். அதனை அங்கீகரித்து செல்வ பிருந்தாவை பாராட்டி, ‘ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்’ நிறுவனமும், ‘இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்’ நிறுவனமும் சான்று மற்றும் பதக்கம் வழங்கி கௌரவித்துள்ளது.

இது குறித்து செல்வ பிருந்தா தெரிவிக்கையில், “மருத்துவர்களின் வழிகாட்டுதல்படி, உடல் ஆரோக்கியம் குறித்த பரிசோதனை சான்று பெற்றுக்கொண்டு, வீட்டில் இருந்தபடியே தாய்ப்பால் சேமித்து வைக்க தொடங்கினேன். அதனை அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்ப்பதற்கு தன்னார்வலர்கள் உதவினார்கள். அரசு மருத்துவமனைனயின் மைக்ரோ பயாலஜி துறையை சேர்ந்த மருத்துவர்கள் எனது தாய்ப்பாலை ஆய்வு செய்த பின்னர் அதனை சிகிச்சையில் உள்ள குழந்தைகளுக்கு வழங்கினார்கள்.

தாய்ப்பால் கிடைக்காமல் தவிக்கும் குழந்தைகளின் உயிரை காப்பாற்றுகிறோம் என்ற மனமகிழ்ச்சியில் எனக்கு குறைவில்லாமல் தாய்ப்பால் சுரந்தது. எனது கணவர் மற்றும் குடும்பத்தினரின் ஒத்துழைப்புடன் தாய்ப்பால் தானம் செய்ததாக செல்வ பிருந்தா தெரிவித்தார்.

தன்னைப் போன்று நாடு முழுவதும் உள்ள தாய்மார்கள் சத்துக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு அவர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தாய்ப்பாலை தானமாக வழங்கி அவர்களுக்கு உதவிட முன்வர வேண்டும் என்றும் செல்வ பிருந்தா கேட்டுக்கொண்டார்.

தமிழக முழுவதும் சுமார் 10,000 பெண்கள் தாய்ப்பால் தானம் செய்து வருகிறார்கள். ரத்த தானம், உடல் உறுப்பு தானம் போன்று தாய்ப்பால் தானம் செய்வது குறித்த விழிப்புணர்வை, தாய்மார்களிடம் அதிகரிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.

உலக தாய்ப்பால் வாரம் விழா கொண்டாடும் இந்த தருணத்தில், செல்வ பிருந்தாவின் இத்தகைய செயலுக்கு அங்கீகாரம் கிடைக்கப்பெற்றது பெருமை அளிப்பதாக உள்ளதுடன் இது மற்ற தாய்மார்களுக்கும் ஒரு கூட்டத்தை அளிப்பதாகவே உள்ளது… அரசும் இதுபோன்ற தாய்மார்களை ஊக்குவித்து தாய்ப்பால் தானத்தை ஊக்குவிக்க முன்வர வேண்டும் என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.