மதுபோதையால் பறிபோன இரண்டு உயிர்கள்: ஒருவர் கவலைக்கிடம்

0 123
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 15 திருச்சி கருமண்டபம் பகுதியைச் சேர்ந்த வினோத், ரமேஷ் மற்றும் சரவணன் ஆகிய மூவரும் நண்பர்கள். இவர்கள் மூவரும் இரவு நேர உணவகங்களில் புரோட்டா மாஸ்டர்களாக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கருமண்டபம் பகுதியில் இயங்கி வரும் மனமகிழ் மன்ற மதுபானக் கூடத்தில் மது அருந்திவிட்டு, மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்த நிலையில், சாலையைக் கடக்க முயன்ற இவர்களது இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த லாரி மோதியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கோர விபத்தில் வினோத் மற்றும் ரமேஷ் ஆகிய இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த சரவணன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பாக திருச்சி கண்டோன்மென்ட் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், இருசக்கர வாகனம் மதுபோதையில் இயக்கப்பட்டதாக தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், விபத்தில் சிக்கிய மூவரும் இரவு நேர உணவகங்களில் புரோட்டா மாஸ்டர்களாக பணியாற்றி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில், கருமண்டபம் பகுதியில் செயல்பட்டு வரும் இந்த மதுபானக் கூடத்தால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், இதுபோன்ற விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இரண்டு உயிர்களைப் பறித்த இந்த கோர விபத்துக்குப் பிறகாவது, அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், விபத்துகளைத் தடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா? என்பதே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் கேள்வியாக உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.