மணப்பாறை அருகே இரண்டு மலைப்பாம்புகள் பிடிப்பட்டன
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள அம்பலகாரன்பட்டியில் விவசாய தோட்டத்தின் அருகே சுமார் 12 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு இரை தேடி வந்த நிலையில் அங்கு தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மலைப்பாம்பை கண்டவுடன் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பெயரில் நிலைய அலுவலர் மனோகர் மற்றும் நாகேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 12 அடி நீளம் கொண்ட மலைப் பாம்பினை பாம்பு பிடிக்கும் கருவி உதவியுடன் லாவகமாக பிடித்தனர்.
இதேபோல் துவரங்குறிச்சி அருகே உள்ள அடைக்கம்பட்டியில் குடியிருப்பு பகுதி அருகே சுமார் 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று இரை தேடி வந்துள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்ததையடுத்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பாம்பை பிடித்தனர். இரண்டு மலைப்பாம்புகளையும் துவரங்குறிச்சி வனத்துறை அலுவலர்களிடம் தீயணைப்புத்துறையினர் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அருகிலுள்ள தச்சமலை வனப்பகுதியில் கொண்டு சென்று பாம்புகளை விடுவித்தனர்.
தற்போது மழைக்காலம் தொடங்கியதால் அதிகளவிலான மலைப்பாம்புகள் வனப்பகுதியில் இருந்து வெளியே வர தொடங்கியுள்ளது. இதனால் தோட்டத்தில் வேலை செய்பவர்கள் சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் வேலைகளை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் விவசாயிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.