திருவெறும்பூர் அருகே 46 பவுன் நகைகள் திருடிய வழக்கில் சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது
திருச்சி, ஆக.3 திருவெறும்பூர் அருகே மத்திய அரசு ஊழியர் வீட்டில் 46 பவுன் நகைகளை திருடிய 2 சிறுவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கே.கே.நகரில் வியாபாரி வீட்டில் திருடிய சிறுவனும் சிக்கினான்.
திருச்சி கே.கே. நகர் சுப்பிரமணியபுரம் பழைய பாண்டியன் தெருவைச் சேர்ந்தவர் வள்ளியப்பன், ஆட்டு தோல் வியாபாரி. இவரது மனைவி மல்லிகா (வயது 74).
கடந்த 23-ந்தேதி மல்லிகா, வீட்டை பூட்டிவிட்டு உறவினர்களுடன் திருமணத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு சென்றுவிட்டார். 3 நாட்களுக்கு பிறகு கே.கே.நகர் திரும்பிய போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 31 பவுன் தங்க நகைகள் மற்றும் 20 சிறிய அளவிலான வைரக் கற்கள் திருடப்பட்டிருந்தது.
இதுகுறித்து புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, திருட்டில் ஈடுபட்டது 2 சிறுவர்கள் என தெரியவந்தது. இதில் ஒரு சிறுவன் போலீாரிடம் சிக்கினான். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து 2 தங்க சங்கிலியை மீட்டனர். மற்றொரு சிறுவனை தேடிவருகின்றனர்.
கச்சா எண்ணெய் நிறுவன ஊழியர்
திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி சங்கச்சா வடி பகுதியில் உள்ள அண்ணாபுரி நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (38): இவர் காரைக்காலில் உள்ள கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி நிறுவனத்தில் (ஓ.என்.ஜி.சி.) பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரம்யா. இவர் கடந்த 21-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு குழந்தைகளை பள்ளிக்கு விட சென்றுவிட்டார். பின்னர் அவர் துவாக்குடி பெல் நகரில் உள்ள மாமியார் வீட்டில் தங்கிவிட்டார்.
பின்னர் பள்ளி முடிந்ததும் குழந்தைகளை அழைத்து கொண்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டு மாடியில் உள்ள கதவின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 46 பவுன் நகைகள் திருடப்பட்டு இருந்தது.
இதுகுறித்து புகாரின் பேரில் துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டை இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்த வருதையின் மகன் அமீர் (21) மற்றும் 2 சிறுவர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர்கள் கோவிந்தராஜ் வீட்டில் திருடியவர்கள் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து 46 பவுன் தங்க நகைகளை மீட்டர். பின்னர் சிறுவர்கள் இருவரையும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். அமீரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.