கோயில் கும்பாபிஷேகத்தில் நகை பறித்த பெண் கைது
திருச்சி, ஆக.24 துவரங்குறிச்சியில் கோவில் கும்பாபிஷேக விழாவில் மூதாட்டியிடம் சங்கிலி பறித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதன்படி பொன்னம்பட்டியை சேர்ந்த அமிர்தம் (வயது 68) கோபுர தரிசனம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது அவர் அருகில் நின்று கொண்டிருந்த ஒரு பெண், அமிர்தம் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்துள்ளார். இதைக் கண்ட மூதாட்டி கூச்சலிட்டார். அருகில் இருந்த பொதுமக்கள், அந்த பெண்ணை பிடித்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து போலீசார், அந்த பெண்ணை துவரங்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.