முசிறி அருகே டாஸ்மாக் கடை, மதுபான பாரை மாற்றக் கோரி பெண்கள் முற்றுகை போராட்டம்
திருச்சி, மார்ச் 16 முசிறி அருகே அரசு டாஸ்மாக் கடை மற்றும் மதுபான பார் ஆகியவற்றை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி திரளான பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
திருச்சி மாவட்டம், முசிறி அருகே பெரியபள்ளிபாளையம் கிராமத்தில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் கடை மற்றும் புதிதாக திறக்கப்பட்ட மதுபான பார் ஆகியவற்றை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, பெரியபள்ளிபாளையம் கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. தற்போது அதனுடன் இணைந்து மதுபான பாரும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் அப்பகுதியில் அடிக்கடி சாலை விபத்துகளினால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். நேற்று மாலை அப்பகுதியில் மோட்டார் சைக்கிள் அருகே நின்று பேசிக் கொண்டிருந்தவர்கள் மீது கார்கள் மோதிய விபத்தில் பரிதாபமாக இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மது அருந்திவிட்டு வாகனங்களை கவனக்குறைவாகவும் அதிவேகம் வேகமாகவும் ஓட்டி வருவதால் இப்பகுதியில் விபத்துகள் அன்றாட நிகழ்வாக மாறிவிட்டதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்தசூழலில் மதுக்கடையால் ஏற்படும் இடையூறுகளை கண்டித்தும், டாஸ்மாக்கடை மற்றும் மதுபான பார் ஆகியவற்றை அப்பகுதியில் இருந்து அகற்றி வேறு இடத்திற்கு மாற்றக் கோரி சின்ன பள்ளிபாளையம், பெரிய பள்ளிபாளையம், காந்தி சிலை மற்றும் உன்னியூர் ஆகிய பகுதிகளிலிருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு வந்து டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த முசிறி டி.எஸ்.பி முத்துக்குமார் தலைமையில் காட்டுப்புத்தூர் இன்ஸ்பெக்டர் அன்னக்கொடி மற்றும் போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் இதை அடுத்து அவர்கள் முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
முன்னதாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் அரசு டாஸ்மாக் கடையை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்தப்படும் எனவும் கூறி சென்றனர்.