செல்போன் வெடித்து படுகாயமடைந்த பெண்கள்- நலம் விசாரித்த எம்.எல்.ஏ
மணப்பாறை அருகே இடி தாக்கியதில் இடுப்பில் வைத்திருந்த செல்போன் வெடித்து படுகாயமடைந்த பெண் உள்ளிட்ட இடிதாக்கி சிகிச்சை பெற்று வரும் 3 பெண்களிடம் எம்.எல்.ஏ நேரில் நலம் விசாரித்தார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் நள்ளிரவு வரை அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்து வந்தது. இந்நிலையில் மருங்காபுரி அருகே வகுத்தாழ்வார் பட்டியைச் சேர்ந்த
கூலித் தொழிலாளிகளான மணிமேகலை (30), முத்துலட்சுமி (40), மற்றும் பெரியம்மாள் (50) ஆகியோர் வயலில் களை பறிக்கும் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது இடி சப்தம் ஏற்பட்டதுடன் அவர்கள் அருகே இடி விழுந்ததாக கூறப்படுகிறது.
இதில் மணிமேகலை இடுப்புச் சேலையில் சொருகி வைத்திருந்த செல்போன் வெடித்து தீ பற்றி எரிந்தது. இதில் மணிமேகலை படுகாயம் அடைந்தார். மேலும் மற்ற இருவரும் அதிர்ச்சியில் மயக்கமடைந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு மூவரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சென்று காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்தார். மேலும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். எம்எல்ஏவுடன் மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி மேற்கு மாவட்ட தலைவரும் மாமன்ற உறுப்பினருமான பைஸ் அகமது, மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் காதர் மொய்தீன், நகர தலைவர் அக்பர்பாட்ஷா, நகர செயலாளர் சபுரலி ஆகியோர் உடன் சென்றனர்.