கலெக்டர் அலுவலகத்தின் கண்ணாடியை உடைத்த தொழிலாளி கைது….
திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு ஒரு மர்ம ஆசாமி அலுவலக நுழைவாயில் பகுதியில் வெறித்துப் பார்த்தபடி நின்றார். பின்னர் சிறிது நேரத்தில் அந்த நபர் நுழைவாயிலில் உள்ள கண்ணாடி மீது சரமாரியாக கற்களை வீசினார்.
இதனை ரோந்து சென்ற திருச்சி செசன்ஸ் கோர்ட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் பார்த்துவிட்டார். உடனே அந்த மர்ம ஆசாமியை பிடித்து செசன்ஸ் கோர்ட் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றார். பிறகு அந்த மர்ம ஆசாமியிடம் விசாரணை நடத்திய போது தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி பெருமாள் புரத்தைச் சேர்ந்த மாடசாமி (வயது 40) என்பது தெரிந்தது. அவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார் என்றும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து இருப்பதாகவும் சமீப காலமாக மாடசாமி திருச்சியில் தங்கி பேப்பர் பொறுக்கி விற்று வருவதாகவும் தெரிய வந்தது.
மேலும் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் தனது மனைவியுடன் சேர்த்து வைக்குமாறு மனு கொடுக்க வந்ததாகவும் அங்கு கலெக்டர் அலுவலகத்தில் யாரும் இல்லாத காரணத்தால் நுழைவாயில் கண்ணாடியை உடைத்து விட்டதாக கூறினார். இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி விக்னேஷ் செசன்சு கோர்ட் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாடசாமியை கைது செய்தனர்.