வெவ்வேறு சம்பவங்களில் ஆன்லைன் மூலம் இருவரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி
திருச்சி ஆக 11 திருச்சி திருவரங்கம் திருவானைக்கோவலைச் சேர்ந்த ஜெயக்குமார் (வயது37) என்பவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு, கடந்த 6ந்தேதி ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் வட்டார போக்குவரத்து அலுவலகம் என்ற பெயரில் ஒரு இணைப்பு வந்துள்ளது. அதில் அவரது வாகனத்திற்கு அபராதம் நிலுவையில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த இணைப்பைக் கிளிக் செய்து அபராதம் செலுத்த முயன்ற சில நிமிடங்களில், அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரு1 லட்சம் பணம் திருடப்பட்டது. இதுகுறித்து அவர் சைபர் குற்றப் பிரிவில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போன்று திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் ஜிம் நடத்தி வருபவர் திருச்சி ஜே.கே. நகரைச் சேர்ந்த கணேஷ் (வயது48), இவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் சுப்பிரமணியபுரம் கிளையில் கணக்கு வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த 8ந்தேதி அன்று வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கச் சென்றபோது, கணக்கில் பணம் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக விசாரணை செய்த போது மர்ம ஆசாமிகள் சிலர் அவரது கணக்கிலிருந்து ரூ2.91 லட்சத்தை ஆன்லைன் மூலம் திருடியது தெரியவந்தது. இதுகுறித்து கணேஷ்சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பணத்தை திருடிய மர்ம ஆசாமியை வலை வீசி தேடி வருகின்றனர்.