ஒட்டகத்தை வைத்து யாசகம்: எச்சரித்து அனுப்பிய போலீஸார்
திருச்சி,ஆக.1 திருச்சி மாவட்டம், மணப்பாறை நகரில் இன்று ஒரு ஒட்டகத்தை வைத்துக் கொண்டு ஒருவர் வலம் வந்து கொண்டிருந்தார். பின்னர் அந்த ஒட்டகத்தை ஒவ்வொரு கடையாக அழைத்துச் சென்று யாசகம் பெற்றுக் கொண்டிருந்தார். சுட்டெரித்த வெயிலில் ஒட்டகத்தை வைத்து ஒருவர் யாசகம் பெற்றுக் கொண்டிருப்பதை அறிந்த சிலர் இதுபற்றி திருச்சி மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் படி மணப்பாறை கால்நடை மருத்துவர்கள் அந்த ஒட்டகத்தை அழைத்துச் சென்று அதை மருத்துவ பரிசோதனை செய்தனர். ஒட்டகம் திடகாத்திரமான நிலையில் இருந்தது. இருப்பினும் ஒட்டகத்தை வைத்து யாசகம் பெறக்கூடாது என்று அறிவுறுத்தி ஒட்டகத்தை அழைத்துச் செல்லும்படி அனுப்பி வைத்தனர். மேலும் போலீசாரும் அந்த பகுதிக்கு வந்து ஒட்டகத்தை வைத்து பிச்சை எடுப்பதை பார்த்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து அனுப்பி வைத்ததை அடுத்து ஒட்டகத்தை அழைத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார். அவர் யார்? எந்த ஊர் என்று விசாரித்த போது பதில் சொல்லாமல் புறப்பட்டுச் சென்றார்.