12501 அகல் விளக்கு ஏற்றி சிவனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பளுவஞ்சியில் அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. நூற்றாண்டு பழைமை வாய்ந்த இக்கோவில் மேற்கு நோக்கிய சிவாலயம் என்ற சிறப்பை பெற்று உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் கார்த்திகை மகா தீபத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் தீபத்திருவிழா இன்று நடைபெற்றது. முன்னதாக பரணி தீபம் ஏற்றப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் கோவில் முன்பு மகா தீபம் ஏற்றப்பட்டத்தை அடுத்து ஆலய வளாகத்தில் 12501 அகல் விளக்குகளை சிவலிங்கம், கும்பம் மற்றும் அகல் விளக்கு போன்று வடிவமைத்து அதில் முழுவதுமாக விளக்கேற்றி லட்சத்து எட்டு தீப தரிசனம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நவக்கிரக தோஷம், திருமண தோஷம், சர்ப்பதோஷம், புத்திரதோஷம், களத்திர தோஷம் முதலான தோஷங்கள் நீங்கவும் அகல் விளக்கேற்றி பக்தர்கள் சிவனை வழிபட்டனர். இதில் சுற்றுப்புற பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டனர்.