திருச்சி இ.பி.ரோடு தேவதானம் அருகில் திருச்சி கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு ஸ்கூட்டரில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றுகொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவர்கள் அப்பகுதியில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு மற்றும் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக திருவெறும்பூரை சேர்ந்த சண்முகம்(52), நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்த மணிகண்டன்(27) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா, லாட்டரி சீட்டுகள், 2 செல்போன்கள், ஒரு ஸ்கூட்டர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதுபோல் வாழைக்காய் மண்டி பகுதியில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்றதாக வரகனேரியை சேர்ந்த வைத்தீஸ்வரனை(29) காந்தி மார்க்கெட் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.150 மற்றும் லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.