மணப்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டு செயல்பட்டுக்கு வந்தது : மருத்துவ அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கூடுதல் படுக்கை வசதிகள் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கொரோனாவிற்கான தனி வார்டு தயார் செய்யப்பட்டது. அதற்கு தேவையான வசதிகள் மற்றும் ஆக்ஸிஜன் வசதி ஏற்படுத்தப் பட்டதைத் தொடர்ந்து அந்த வார்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்நிலையில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் மருத்துவமனைக்கு என்னென்ன தேவை என்பதையும் தலைமை மருத்துவ அதிகாரி மருத்துவர் முத்துகார்த்திகேயனிடம் கேட்டறிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மணப்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் பயன்பெறும் வகையில் கொரோனா வார்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. அவசர தேவைக்கான ஆக்சிசன் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 42 பேர் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 25 ஆக்சிஜன் சிலிண்டர் வசதிகள் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது கூடுதலாக 25 சிலிண்டர் என ஆக்சிஜன் சிலிண்டர் வசதியுடன் மொத்தம் 50 படுக்கைகள் உள்ளன. மேலும் கொரோனா வார்டுக்கு இன்னும் சில தேவைகள் இருப்பதால் அதையும் அரசிடம் கேட்டுள்ளோம் அனைத்து தேவைகளும் விரைவில் நிறைவேற்றப்படும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுவருகிறது. ஆக்சிஜன் தேவைக்கு உள்நாடுகளில் இருந்து ஏற்பாடு செய்வது மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்து பெருவதற்கான பணிகளையும் முதல்வர் துரிதப்படுத்தியுள்ளார் எந்த நிலையிலும் பின்னடைவுக்குப் போகாமல் என்னென்ன செய்யமுடியுமோ அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்துள்ளது. என்று கூறினார்.