திருச்சி மாநகராட்சி மேயர், துணை மேயர் தேர்வு!
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 19-ந் தேதி நடத்தப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 5 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று, கடந்த 22-ந் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 401 வார்டுகளில் பெரும்பான்மையான வார்டுகளை ஆளுகிற கட்சியான தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது. திருச்சி மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 401 வார்டுகளுக்கான உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது. திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளை பொறுத்தவரை தி.மு.க.(ம.ம.க. உள்பட) 49 வார்டுகளையும்,
காங்கிரஸ் 5 வார்டுகளையும், ம.தி.மு.க. 2 வார்டுகளையும், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றன. ஆகமொத்தம் தி.மு.க. கூட்டணி 59 வார்டுகளை கைப்பற்றியது. அ.தி.மு.க. 3 வார்டுகளையும், சுயேச்சைகள் 2 வார்டுகளையும், அ.ம.மு.க. ஒரு வார்டிலும் வெற்றி பெற்றன. மாநகராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 65 வார்டுகளின் கவுன்
சிலர்கள் பதவி ஏற்பு விழா திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஏ.எஸ்.ஜி. லூர்துசாமி மாமன்ற கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர்கள், துணைத்தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள், துணைத்தலைவர்கள் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.
இதில் திருச்சி மாநகராட்சி மேயராக அன்பழகனும், துணை மேயராக திவ்யாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். துணை மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ள அன்பழகன் கடந்த 1980ஆம் ஆண்டு முதல் கழகப்பணி மேற்கொண்டார்.
1993 முதல் 1998ஆம் ஆண்டு வரை மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக பதவி வகித்தார். 1999ஆம் ஆண்டு முதல் திருச்சி மாநகர செயலாளர் பதவி வகித்தார்.
2001 முதல் 2011ஆம் ஆண்டு வரை துணை மேயர் பதவி வகித்தார்.
2014ஆம் ஆண்டு திருச்சி நாடாளுமன்ற தேர்தலில் 3 லட்சத்து 8 ஆயிரத்து வாக்குகள் பெற்று இரண்டாமிடம் பிடித்தார். தற்போது மேயராக பொறுப்பேற்றுள்ளார்.