சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையரை கண்டித்து வியாபாரி தீக்குளிக்க முயற்சி!
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்வதற்காக சமயபுரம் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இதனால் கோவிலை சுற்றி அம்மன் படகடைகள், அகல் விளக்கு, கடலை, பொரி, பித்தலை பொருட்கள், கடவுளின் உருவப்படங்கள், பழக்கடைகள் பூக்கடைகள் உள்ளிட்ட பொருட்களை விற்கும் தள்ளுவண்டி கடைகள்
உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன. கோவிலுக்கு வரும் பக்தர்களை வைத்துதான் கோவிலைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வாழ்வாதாரம் அடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கோவிலின் பின்புறம் தள்ளுவண்டியில் பொரிகடலை விற்றுக்கொண்டிருந்த வி.துறையூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கணேசன் (வயது 35) என்பவரை அங்கு வந்த கோவில் இணை ஆணையர் கல்யாணி இந்த பகுதியில் தள்ளுவண்டி
கடை போடக்கூடாது, என்றும் அவரை உடனடியாக அப்புறப்படுத்துமாறும் கோவிலில் பணியாற்றும் தனியார் பாதுகாவலர்களிடம் கூறியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து, காவலர்கள் அவரை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த
அவர் சற்று நேரத்தில் ராஜகோபுரம் கடை வீதியில் அமைந்துள்ள கோவில் இணை ஆணையர் அலுவலகத்தின் முன்பு தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு அலுவலகத்தின் உள்ளே சென்று தீக்குளிக்க முயற்சித்தார். இதைக்கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சமயபுரம் போலீசார் அதிர்ச்சியடைந்து உடனடியாக அவரை தீக்குளிக்கும் முயற்சியில் இருந்து மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.